ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு தடை; மத்திய அரசின் அகந்தைக்கு உதாரணம் மெகபூபா கண்டனம்
ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதை மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
பாதுகாப்பு தொடர்பான மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இதில், ‘ஜமாத்–இ–இஸ்லாமி ஜம்மு மற்றும் காஷ்மீர்’ இயக்கத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தடை 5 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும். உள்துறை அமைச்சகம் அமைத்த தீர்ப்பாயத்தின் ஆய்வின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்த இயக்கத்தினரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதில், இது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீனின் அரசியல் இயக்கம் என தெரியவந்தது.
ஜம்மு காஷ்மீரில் போலீஸார் பிரிவினைவாத கட்சியின் தலைவர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஏறக்குறைய 100 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜமாத்- இ- இஸ்லாமி அமைப்பின் அப்துல் ஹமிது பியாஸ், செய்தித்தொடர்பாளர் ஜாஹித் அலி ஆகியோரும் அடங்குவர். அத்துடன் இந்த இயக்கத்தினர் தேசவிரோத மற்றும் சூழ்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி இயக்கம் தடை செய்யப்பட்டதற்கு மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. ஜமாத் -இ -இஸ்லாமி அமைப்பு கடந்த காலங்களில் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தடையை எதிர்க்கொண்டது. 1990-களில் தடை செய்யப்பட்டு பின்னர் 1995-ம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.
ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்துக்கு தடை மத்திய அரசின் அகந்தைக்கு உதாரணம் என விமர்சனம் செய்துள்ள மெகபூபா முப்தி, கருத்துகளுக்கு இடையேயான போராட்டக்களம்தான் உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால், அரசு பலத்தை பிரயோகிக்கிறது. ஜமாத் -இ -இஸ்லாமி ஜம்மு மற்றும் காஷ்மீர் அமைப்பை தடை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
காஷ்மீர் அரசியல் விவகாரங்களை அகந்தையுடனும் பலப் பிரயோகத்துடனும் மத்திய அரசு அணுகுவதற்கான மற்றோர் உதாரணம் இது என விமர்சனம் செய்துள்ளார்.
Related Tags :
Next Story