பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல்


பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதல்
x
தினத்தந்தி 1 March 2019 10:10 PM GMT (Updated: 1 March 2019 10:10 PM GMT)

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து நேற்று 8–வது நாளாக இந்த தாக்குதல் நடந்தது.

பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியில் உள்ள கமல்கோட் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று எல்லைதாண்டி தாக்குதல் நடத்தியது. இரவு முழுவதும் விட்டுவிட்டு துப்பாக்கியால் சுட்டது. இந்தியாவும் பதிலுக்கு திருப்பி சுட்டது. பாகிஸ்தான் தாக்குதலில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார்.

அதேபோல பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுடுவதும், சிறு குண்டுகளை வீசுவதுமாக இருந்தது. இந்தியாவும் தீவிரமான பதிலடி கொடுத்தது. ரஜோரி மாவட்டத்திலும் பல இடங்களில் அத்துமீறி தாக்குதல்கள் நடந்தன. பூஞ்ச் மாவட்டம் மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் நசீம் அக்தர் என்ற பெண் காயம் அடைந்தார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் 60–க்கும் மேற்பட்ட முறைகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. பூஞ்ச், ரஜோரி, ஜம்மு, பாரமுல்லா ஆகிய மாவட்டங்களில் கிராமங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டார், 9 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லை பகுதியில் தாக்குதல்கள் நடத்திவருவதால் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள்ளே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Next Story