நியூட்ரினோ தொடர்பான வழக்கு: விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு


நியூட்ரினோ தொடர்பான வழக்கு: விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 1 March 2019 10:53 PM GMT (Updated: 1 March 2019 10:53 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பாக டாடா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வுப்பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

புதுடெல்லி,

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில்இதை எதிர்த்து  டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், வினித் சரண் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை துவங்கியதும் மத்திய அரசு தரப்பில், சிறப்பு திட்டத்தின் கீழ் ‘பி’ பிரிவில் இது தொடர்பான கட்டுமானங்கள் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் போது இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசு கூறும் சிறப்பு திட்டம் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Next Story