இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே திருமலை வருகை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, அவருடைய மனைவி மைத்ரி விக்ரமசிங்கே மற்றும் குடும்பத்தினர் நேற்று மாலை திருமலைக்கு வந்தனர்.
திருமலை,
கொழும்புவில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவரும், குடும்பத்தினரும் நேற்று மாலை 3 மணியளவில் சென்னைக்கு வந்தனர். அங்கிருந்து தனி விமானத்தில் மாலை 4 மணியளவில் ரேணிகுண்டா வந்தனர்.
அங்கிருந்து காரில் திருப்பதி வழியாக ரனில்விக்ரமசிங்கே திருமலைக்கு வந்தார். அங்குள்ள கிருஷ்ணா விடுதியில் ரனில்விக்ரமசிங்கே ஓய்வெடுத்தார். அந்த விடுதிக்குச் சென்ற திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு, மாநில மந்திரி அமர்நாத்ரெட்டி, தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, வரவேற்பு அதிகாரிகள் பாலாஜி, லோகநாதம், பறக்கும்படை அதிகாரி மனோகர் ஆகியோர் ரனிலுக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
திருப்பதி உதவி கலெக்டர் மகேஷ்குமார் தலைமையில் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் திருமலை–திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி பி.லட்சுமிகாந்தம், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா ஆகியோர் ரனிலுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
ரனில்விக்ரம சிங்கே மற்றும் குடும்பத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். பின்னர் திருமலையில் இருந்து புறப்பட்டு, ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து மதியம் 1.30 மணியளவில் விமானத்தில் ஏறி இலங்கை புறப்படுகிறார்கள்.