அபிநந்தனுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு : துணிச்சல், மனஉறுதியை பாராட்டினார்


அபிநந்தனுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு : துணிச்சல், மனஉறுதியை பாராட்டினார்
x
தினத்தந்தி 3 March 2019 4:45 AM IST (Updated: 3 March 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய விமானி அபிநந்தனுக்கு டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. அங்கு அபிநந்தனை சந்தித்து பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அவரது துணிச்சலையும், மனஉறுதியையும் பாராட்டினார்.

புதுடெல்லி, 

காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், அந்த நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.

ஜெனீவா ஒப்பந்தத்தின்படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும், அவரை நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இரவோடு இரவாக, விமானப்படை விமானம் மூலம் அபிநந்தன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். உடனடியாக, டெல்லியில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அபிநந்தனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வலது கண் வீங்கி இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததால், அவரை சகஜநிலைக்கு கொண்டுவரும் பணியும் நடந்தது.

பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் உடலில் ஏதேனும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது நடமாட்டத்தை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில், அவரது உடலில் உளவு கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்றும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

நேற்று காலை, அபிநந்தனை அவருடைய குடும்பத்தினர் சந்தித்தனர். விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோயா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சந்தித்தனர்.

பின்னர், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அபிநந்தனை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில், தான் 60 மணி நேரம் இருந்தபோது நடந்த சம்பவங்களை நிர்மலா சீதாராமனிடம் அபிநந்தன் விவரித்தார்.

உங்களுடைய துணிச்சல் மற்றும் மனஉறுதியை பார்த்து ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

மேலும், இந்திய விமானப்படையும் அபிநந்தனுக்கு ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகழாரம் சூட்டி உள்ளது.

அதில், “நாட்டின் கவுரவத்துக்காக, உங்களது தனிப்பட்ட பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டீர்கள். வரலாறு படைத்து விட்டீர்கள். இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பை உங்களில் கண்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.

விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி தனது செய்தியில், “விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக திரும்பியதை வரவேற்கிறேன். அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் நினைத்து தேசம் பெருமைப்படுகிறது” என்று கூறி உள்ளார்.

பிரதமர் தனது செய்தியில், “தாயகம் திரும்பிய அபிநந்தனை இந்தியா வரவேற்கிறது. தங்களது அபரிமிதமான துணிச்சலை கண்டு நாடு பெருமைப்படுகிறது. நமது படைகள் 130 கோடி இந்தியர்களுக்கும் உந்துசக்தியாக திகழ்கின்றன” என்று கூறி இருக்கிறார்.


Next Story