அபிநந்தன் உடலில் உளவு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் என தகவல்
விமானத்தில் இருந்து வெளியேறிய போது விங் கமாண்டர் அபிநந்தனுக்கு கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,
காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், அந்த நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.
ஜெனீவா ஒப்பந்தத்தின்படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும், அவரை நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.
இரவோடு இரவாக, விமானப்படை விமானம் மூலம் அபிநந்தன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். உடனடியாக, டெல்லியில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அபிநந்தனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வலது கண் வீங்கி இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததால், அவரை சகஜநிலைக்கு கொண்டுவரும் பணியும் நடந்தது.
பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் உடலில் ஏதேனும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது நடமாட்டத்தை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில், அவரது உடலில் உளவு கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்றும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தனுக்கு கூலிங் டவுன் சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர், அது தொடர்பான விவரங்களை இந்திய அரசுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது. அபிநந்தனின் மனதையும், உடல்நலத்தையும் பேண கூலிங் டவுன் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமானத்தில் இருந்து வெளியேறிய போது விங் கமாண்டர் அபிநந்தனுக்கு கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
விமானப்படை வீரர் அபிநந்தனின் உடலில் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் உறுதியாகியுள்ளது. அபிநந்தனின் விலா எலும்பு ஒன்றும் முறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குணமாக அதிக நாட்கள் ஆகும் என்கிறார்கள். பாகிஸ்தான் உள்ளூர் மக்கள் தாக்கியதில் இந்த முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் இன்னும் சில மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். திங்கள் கிழமை வரை இந்த சோதனைகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story