ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் - பிரதமர் மோடி


ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் துப்பாக்கி தொழிற்சாலையை தொடங்கி வைத்தார் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 3 March 2019 8:34 PM IST (Updated: 3 March 2019 8:41 PM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில், புதிய துப்பாக்கி தொழிற்சாலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

அமேதி,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு உட்பட்ட கோர்வா என்ற இடத்தில் அதிநவீன துப்பாக்கி தொழிற்சாலை துவக்கி வைக்கப்பட்டது. தொழிற்சாலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்தோ ரஷ்யா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் சார்பிலான இந்த தொழிற்சாலையில் ஏகே 47 ரக துப்பாக்கியின் அதிநவீன வடிவமான ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ஏழரை லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு துணை ராணுவப்படையினருக்கு வழங்கப்பட உள்ளன​.

தொழிற்சாலையை துவக்கி வைத்த பிரதமர் மோடி  பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் சைக்கிள் தயாரிப்பு ஆலை கூடவந்ததா?  ராணுவத்துக்காக நவீன ரக ஏ.கே.203 துப்பாக்கியை ரஷ்யாவுடன் இணைந்து அமேதியில் தயாரிக்க உள்ளோம். துப்பாக்கி தயாரிப்பு திட்டம் குறுகிய காலத்தில் நிறைவேற ஒத்துழைத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி என்றார்.

அதனை தொடர்ந்து துப்பாக்கி தொழிற்சாலை துவக்க விழாவில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 

அமேதி தொகுதியை கவனிக்க வேண்டியவர் எதுவும் செய்யாத நிலையில், பிரதமர் மோடியின் ஓராண்டு முயற்சியில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது.

சொந்த தொகுதியான அமேதியின் முன்னேற்றத்திற்கு ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை. பிரதமர் மோடியின் முயற்சியால் அமேதியின் கோர்வாவில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. பிரதமர் மோடியின் முயற்சியால் ஒரே ஆண்டில் அமேதி தொகுதி நற்பயன் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story