இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மத்திய இணை மந்திரி சுபாஷ்ராவ் பாம்ரே
டெல்லி ராணுவ மருத்துவமனையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மத்திய இணை மந்திரி சுபாஷ்ராவ் பாம்ரே நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
புதுடெல்லி,
காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் தரை இறங்கிய இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், அந்த நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டார்.
ஜெனீவா ஒப்பந்தத்தின்படியும், உலக நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தும், அவரை நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.
இரவோடு இரவாக, விமானப்படை விமானம் மூலம் அபிநந்தன் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டார். உடனடியாக, டெல்லியில் உள்ள விமானப்படை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அபிநந்தனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது வலது கண் வீங்கி இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மனஅழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்ததால், அவரை சகஜநிலைக்கு கொண்டுவரும் பணியும் நடந்தது.
பாகிஸ்தானில் இருந்தபோது அபிநந்தன் உடலில் ஏதேனும் ஊசி மருந்து செலுத்தப்பட்டதா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது நடமாட்டத்தை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கத்தில், அவரது உடலில் உளவு கருவிகள் ஏதேனும் பொருத்தப்பட்டு இருக்கிறதா? என்றும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.
நேற்று காலை, அபிநந்தனை அவருடைய குடும்பத்தினர் சந்தித்தனர். விமானப்படை தளபதி பிரேந்தர் சிங் தனோயா உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சந்தித்தனர்.
பின்னர், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், அபிநந்தனை சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானில், தான் 60 மணி நேரம் இருந்தபோது நடந்த சம்பவங்களை நிர்மலா சீதாராமனிடம் அபிநந்தன் விவரித்தார்.உங்களுடைய துணிச்சல் மற்றும் மனஉறுதியை பார்த்து ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படுகிறது என்று நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் உள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நேரில் சந்தித்து மத்திய இணை மந்திரி சுபாஷ்ராவ் பாம்ரே நலம் விசாரித்தார். அப்போது அபிநந்தன் புன்முறுவலுடன் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story