இந்திய விமானப் படையும்... அபிநந்தன் குடும்பமும்...


இந்திய விமானப் படையும்... அபிநந்தன் குடும்பமும்...
x
தினத்தந்தி 4 March 2019 11:03 AM IST (Updated: 4 March 2019 11:03 AM IST)
t-max-icont-min-icon

அபிநந்தனின் குடும்பத்தினருக்கும் இந்திய விமானப்படைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட போதிலும் மன உறுதியுடன் தைரியமாக நிலைமையை சமாளித்தார் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். அவருடைய துணிச்சல் நமக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவரது குடும்பத்தினருக்கு இது ஒரு சாதாரண விஷயம்தான்.

ஆம், அவரது தந்தை வர்த்தமான் இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியாற்றியவர். தாய் சோபா வர்த்தமான் பல்வேறு நாடுகளில் போர் முனையில் மருத்துவராக பணியாற்றியவர். அபிநந்தனின் தந்தை ஏர் மார்ஷல் (ஓய்வு) சிம்மகுட்டி வர்த்தமான் சுமார் 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக, இவர் 1999-ல் நடந்த கார்கில் போரில் முக்கிய பங்காற்றி உள்ளார். மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் தாயகமாக விளங்கும் மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார். இந்தப் போரில் 31 மிராஜ் ரக விமானங்கள் பங்கேற்றன. வர்த்தமான் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அப்போது, ஷில்லாங்கை தலைமையகமாகக் கொண்ட கிழக்கு விமானப்படையின் தலைமை அதிகாரியாக இருந்தார். அபிநந்தனின் தாத்தாவும் இந்திய விமானப்படையில் பணியாற்றி உள்ளார்.

இதுபோல அபிநந்தனின் தாய் சோபா வர்த்தமான், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர் இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸில் மேல்படிப்பு படித்தார். இவர் ‘டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்ற சர்வதேச அமைப்பில் உறுப்பினராக இருந்தார். இந்த அமைப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மற்றும் இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளில் மருத்துவ உதவி செய்து வருகிறது.

இதன்படி சோபா வர்த்தமான், ஈரான், ஈராக், ஐவரி கோஸ்ட், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உயிரை பணயம் வைத்து பணியாற்றி உள்ளார். இந்த தகவலை வர்த்தமானின் நண்பரும் விமானப்படையில் அவருடன் பணியாற்றியவருமான டி.கே.சிங்கா தெரிவித்துள்ளார். 

அபிநந்தன் திருவண்ணாமலை மாவட்டம் திருப்பணவூரை பூர்வீகமாக கொண்டவர். தேசிய பாதுகாப்பு பயிற்சி மையத்தில் பட்டம் பெற்றார். கடந்த 2004-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். 15 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர், சுகோய்-30 போர் விமானத்தை கையாள்வதில் சிறந்தவர். விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்ற இவர் இப்போது மிக் 21 பைசன் ரக போர் விமான ஓட்டியாக உள்ளார். இவரது மனைவி தன்வி மார்வாவும் விமானப்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அபிநந்தனின் சகோதரரும் விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

Next Story