முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் (வயது 67) கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவில் உடல் நலக்குறைவால் காலமானார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தெற்கு கன்னட மாவட்டம் வேணூரை சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
அவரது உடல் காத்ரி கம்பாலா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதன் பின்னர் சொந்த ஊரான வேணூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது.
1983ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தனஞ்செய் குமார் எம்.எல்.ஏ., எம்.பி. என அடுத்தடுத்து உயர்ந்தார். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.
இடையில் எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியபோது அக்கட்சியில் தனஞ்செய் குமார் இணைந்தார். எடியூரப்பா பாஜகவில் இணைந்தபோது, தனஞ்செய் அக்கட்சியில் இணைவதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் 2017-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story