சிவராத்திரியில் மட்டும் 1 கோடி பேர் புனித நீராடினர் - கும்பமேளா நிறைவு பெற்றது


சிவராத்திரியில் மட்டும் 1 கோடி பேர் புனித நீராடினர் - கும்பமேளா நிறைவு பெற்றது
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கும்பமேளா நேற்றுடன் நிறைவு பெற்றது. சிவராத்திரியான நேற்று மட்டும் சுமார் 1 கோடி பேர் புனித நீராடினர்.

பிரயாக்ராஜ்,

மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறும். அந்தவகையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கும்பமேளா ஜனவரி 15-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுகள் புனித நீராடினர்.

கும்பமேளாவையொட்டி ஆற்றின் 8 கிலோ மீட்டர் தூரத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாநில அரசு சுமார் ரூ.4 ஆயிரத்து 200 கோடி செலவிட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, மருத்துவம், உணவு, தங்குமிடம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மாநில அரசு செய்து கொடுத்தது.

கும்பமேளாவில் உத்தரபிரதேசம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து புனித நீராடினர். வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து பாதுகாப்புக்காக துணை ராணுவ படையினர், போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டனர்.

சுமார் 1½ மாதங்களாக நடைபெற்ற கும்பமேளா, சிவராத்திரியான நேற்றுடன் நிறைவு பெற்றது. சிவராத்திரியையொட்டி, நேற்று முன்தினம் மாலை முதலே ஏராளமான பக்தர்களும், சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் கூட தொடங்கினர்.

நேற்று மட்டும் 1 கோடி பக்தர்களுக்கும் மேல் புனித நீராடியதாகவும், கும்பமேளா தொடங்கி இதுவரை சுமார் 25 கோடிக்கும் மேல் பக்தர்கள் புனித நீராடி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளா நேற்றுடன் நிறைவு பெற்றாலும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) முறைப்படி அதை அறிவிக்க உள்ளார்.


Next Story