இந்தியாவில் கடல் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி -கடற்படை தளபதி எச்சரிக்கை


இந்தியாவில் கடல் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி  -கடற்படை தளபதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 March 2019 6:22 PM IST (Updated: 6 March 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

கடல் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கடற்படை தளபதி சுனில் லான்பா எச்சரித்துள்ளார்.

புதுடெல்லி,

மும்பை தாக்குதல் போல மீண்டும் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக உளவு தகவல் கிடைத்துள்ளது என கடற்படை தளபதி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இந்திய பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேற்று ஒரு கருத்தரங்கு நடந்தது. இதில் சர்வதேச வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, “3 வாரங்களுக்கு முன்பு புலவாமாவில் மிக கொடூரமான தாக்குதல் நடைபெற்றதை பார்த்தோம். அங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, இந்தியாவை சீர்குலைக்க வேண்டும் என்று விரும்புகிற ஒரு நாடு உதவிக்கரம் நீட்டி உள்ளது. இப்போது இந்தியாவில் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்துவது உள்பட பல்வேறு வகையிலும் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவு தகவல்கள் கிடைத்துள்ளன” என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக வந்துதான் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவித்தது நினைவுகூரத்தக்கது. அதே போன்று இப்போதும் கடல்வழியாக வந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருக்கிறது என்று கடற்படை தளபதி சுனில் லன்பா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-

உலகமெங்கும் பயங்கரவாதிகள் எந்தளவுக்கு வேகமாக ஊடுருவுகிறார்கள் என்பதை பார்த்து இருக்கிறோம். இனிவரும் காலத்தில் ஒரு குறித்த வகை பயங்கரவாதம், உலகுக்கே மிகப்பெரிய பிரச்சினையாக அமையும்.

இந்த பயங்கரவாத சவாலை முறியடிக்கிற விதத்தில், இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.

உலகளாவிய சமூகம், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கட்டுப்படுத்தி, ஒழித்துக்கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது தவிர்க்க முடியாததாக அமைகிறது.

கடல் மீது அனைத்து நாடுகளும் மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாகத்தான் கடல்மீது இப்போது அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இந்தியா ஒரு கடல் நாடு. நாட்டின் வளர்ச்சி மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கு கடல்வழி களத்தின் சாத்தியங்களை அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story