கேரளா: மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை


கேரளா: மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை
x
தினத்தந்தி 7 March 2019 2:51 AM GMT (Updated: 7 March 2019 2:51 AM GMT)

கேரளாவில் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டு ஒருவரை அதிரடிப்படை சுட்டுக்கொன்றது.

வயநாடு, 

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு மாவோயிஸ்டுகள், ரிசார்ட் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள அந்த ரிசார்ட்டில் மாவோயிஸ்டுகள் இருப்பதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் அதிரடிப்படையினருக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து, ரிசார்ட்டுக்கு விரைந்து வந்த அதிரடிபடையினர், 2 மாவோயிஸ்டுகளையும் சுற்றிவளைத்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில், ஒரு மாவோயிஸ்டு பலியானார். ஒருவர் காயம் அடைந்தார். காயம் அடைந்த மாவோயிஸ்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு கூடுதல் அதிரடிப்படையினர் விரைந்துள்ளனர். 

கோழிக்கோடு -  மைசூர் பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற மோதலையடுத்து, அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  சுகந்தகிரி மலைப்பகுதியில் உள்ள பழங்குடியின பகுதி வழியாக மாவோயிஸ்டுகள் இந்த ரிசார்ட் பகுதிக்கு வந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

Next Story