மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் திடீர் ராஜினாமா - பாஜக சார்பில் தேர்தலில் போட்டி?


மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் திடீர் ராஜினாமா - பாஜக சார்பில் தேர்தலில் போட்டி?
x
தினத்தந்தி 8 March 2019 3:42 PM IST (Updated: 8 March 2019 4:23 PM IST)
t-max-icont-min-icon

மிசோரம் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஐசாவல்,

கேரளாவைச் சேர்ந்த கும்மனம் ராஜசேகரன், கடந்த ஆண்டு மே மாதம் மிசோரம் கவர்னராக பதவியேற்றார். கவர்னர் பதவியில் சுமார் 10 மாதங்கள் நீடித்த  நிலையில், இன்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் கும்மனம் ராஜசேகரன் வழங்கினார். இதனை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார்.

மாநிலத்திற்கு புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை அசாம் கவர்னரான பேராசிரியர் ஜக்தீஷ் முகிக்கு மிசோரம் மாநில கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது.

கேரள மாநில பாஜக முன்னாள் தலைவரான கும்மனம் ராஜசேகரன், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. தற்போது அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருப்பதால், தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் கும்மனம் ராஜசேகரனை நிறுத்த மாநில பாஜக முழு ஆதரவையும் வழங்கும் என மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். இந்த தொகுதியில் தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பாஜக நம்பிக்கை வைத்துள்ளது. 

இந்த தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் திவாகரன் களமிறங்குகிறார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி சசிதரூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story