சமாஜ்வாடி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார் முலாயம் சிங் யாதவ்
சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக கூட்டணி 73 இடங்களில் வென்றது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டுமென்றால் வலிமையான கூட்டணி அமைக்க பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் நடவடிக்கை எடுத்து வந்தன.
இதன்படி, சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் எனவும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதாகவும் அக்கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த 15 தொகுதிகளில் உத்தரபிரதேசத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கு காங்கிரஸ் அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை கண்டு அகிலேஷ் யாதவும், மாயாவதியும் அதிர்ச்சி அடைந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும் உடனடியாக சமாஜ்வாதி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மேந்திர யாதவ் பதன் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொகுதியில் இருந்து 3 முறை போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகிலேஷ் யாதவின் உறவினரான அக்சைக்கு பைரோசபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடாவா தனித் தொகுதியில் கமலேஷ் கத்ரியாவும், ரோபர்ஸ்கஞ்ச் தொகுதியில் பைலால் கோல், பஹ்ராச் தொகுதியில் ஷபிர் பல்மிகியும் போட்டியிடுகின்றனர்.
மகன் அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி செயல்பட்டு வரும் நிலையில் அதிருப்தியில் உள்ள முலாயம் சிங்குக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story