மராட்டியத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வாங்கியதில் ஊழல் : தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
மும்பை,
மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக செல்போன் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம் சுமத்தி உள்ளது.இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-
மராட்டிய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி 1 லட்சத்து 20 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு செல்போன் வாங்க முடிவு செய்தது. இதற்காக ரூ. 106 கோடியே 82 லட்சத்து 13 ஆயிரத்து 785 ஒதுக்கப்பட்டது. அரசாணைப்படி செல்போன்களின் விலை தலா ரூ. 8 ஆயிரத்து 877 என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர்கள் வாங்கிய செல்போனின் சந்தைமதிப்பு வெறும் ரூ. 6 ஆயிரம் தான் என தெரியவந்துள்ளது.
ரூ.8 ஆயிரத்து 877-க்கு இதைவிட சிறப்பம்சங்கள் கொண்ட போன்கள் இருக்கும்போது இந்த போன்கள் ஏன் வாங்கப்பட்டன. அங்கன்வாடி ஊழியர்களுக்காக வாங்கப்பட்ட செல்போன்கள் தற்போது சந்தையில் விற்பனையில் இல்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆனால் இவரின் குற்றச்சாட்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.எதிர்க்கட்சிகள் தன் மீது எந்தவித ஆதாரமும் இன்றி குற்றம் சுமத்துவதாகவும், அரைவேக்காட்டு தகவல்களை வைத்துக்கொண்டு தன்மீது வீண் பழி போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story