பிரதமர் மோடி, நீரவ் மோடி இருவருமே இந்தியாவை கொள்ளையடித்தவர்கள் -ராகுல்காந்தி கிண்டல்


பிரதமர் மோடி, நீரவ் மோடி இருவருமே இந்தியாவை கொள்ளையடித்தவர்கள் -ராகுல்காந்தி கிண்டல்
x
தினத்தந்தி 9 March 2019 9:32 PM IST (Updated: 9 March 2019 9:32 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி, நீரவ் மோடி இருவருக்குமே ஒரே பெயர், இருவருமே இந்தியாவை கொள்ளையடித்தவர்கள் என கிண்டல் செய்து ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.

வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ.,  அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவர் லண்டனில் மிகவும் சுதந்திரமாக சுற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியாக வெளியிட்டு உள்ளது.

இவ்வாறு சொகுசாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நீரவ் மோடி, லண்டனில் வைர வியாபாரமும் செய்து வருவதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

இந்த விவகாரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

‘‘லண்டனில் நீரவ் மோடி வசிக்கும் வீடியோ அவருக்கும், அவரது நண்பர் பிரதமர் மோடிக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. இருவருமே இந்தியாவை கொள்ளையடித்தவர்கள். இருவரின் பெயரும் மோடி. இருவருமே எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுப்பவர்கள். இருவருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டு இருப்பவர்கள். இருவருமே விசாரணையை எதிர்கொண்டு வருபவர்கள்’’ என ராகுல் காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

Next Story