கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் அறிவிப்பு - 6 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு


கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் அறிவிப்பு - 6 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 10 March 2019 3:15 AM IST (Updated: 10 March 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 20 தொகுதிகளுக்கும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் 6 எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆளும் இடதுசாரி முன்னணியில் இந்திய கம்யூனிஸ்டு உள்பட 10 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்த கூட்டணி நேற்று அறிவித்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுகிறது. மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. மொத்தமுள்ள 20 வேட்பாளர்களில் 2 பெண் வேட்பாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற 2 சுயேச்சைகளும் வாய்ப்பு பெற்று உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர் பட்டியலில் பிரபல நடிகர் இன்னசென்ட் உள்பட 6 எம்.பி.க்களுக்கும், 4 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு அளித்து உள்ளது. இதைப்போல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 4 வேட்பாளர்களில் 2 பேர் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் ஆவர்.

தனது கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், வெற்றி வாய்ப்பின் அடிப்படையிலேயே, நாடாளுமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதாக கூறினார்.


Next Story