மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் அஜித் தோவல்: காங்கிரஸ்


மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் அஜித் தோவல்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 12 March 2019 8:39 AM GMT (Updated: 12 March 2019 11:51 AM GMT)

மசூத் அசாருக்கு நற்சான்று அளித்தவர் அஜித் தோவல் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, வாஜ்பாய் ஆட்சியில் காந்தகார் விமானக் கடத்தலின்போது பயங்கரவாதி  மசூத் அசார், அகமது ஓமர் சயித் சேக், முஷ்டாக் அகமது ஜர்கர் ஆகியோரை விடுவித்து பயணிகளை மீட்டது. 

இவர்களை அஜித் தோவல்தான் விமானத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தார். அப்போது மசூத் அசாரை, மசூத் அசார்ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் என்று பேசியிருந்தார்.  ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். 

இதற்குப் பதிலடி கொடுத்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"மோடி அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாஜக அரசுதான் பயங்கரவாதி மசூத் அசாரை விடுவித்தது என்ற அனைத்து ரகசியங்களையும் வெளியிட்டு விட்டார். 

மசூத் அசாரை விடுவித்ததே அரசியல் முடிவுதான் என்று கடந்த 2010-ம் ஆண்டு பேட்டியில் தெரிவித்து விட்டார். இப்போது தேச விரோத சட்டத்தை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் பயன்படுத்துவார்களா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அந்த டுவிட்டரில், கடந்த 2010-ம் ஆண்டு அஜித் தோவல் அளித்த பேட்டி குறித்த ஆவணங்களையும்  ரன்தீப்சிங் சுர்ஜேவாலா இணைத்துள்ளார்.

Next Story