காங்கிரசில் இணைந்த ஹர்திக் பட்டேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்?
காங்கிரசில் இணைந்த ஹர்திக் பட்டேல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் என தெரிகிறது.
ஆமதாபாத்,
குஜராத்தில் பட்டேல் இனத்தவருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய ஹர்திக் பட்டேல் (வயது 25) காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சித்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது பேசுகையில், நான் எதற்காக காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் தேர்வு செய்தேன் என்று மக்கள் என்னை கேட்கிறார்கள்.
ராகுல் காந்தி நேர்மையானவர் என்பதால் அவரை நான் தேர்வு செய்தேன். சர்வாதிகாரி மாதிரி செயல்படுவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை என ஹர்திக் பட்டேல் குறிப்பிட்டார். ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட கடந்த வாரம் விருப்பம் தெரிவித்தார் ஹர்திக் பட்டேல். அவரது வருகையால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பட்டேல் சமூகத்தினரின் ஓட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பட்டேல் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு தேர்தலில் அவர் வெற்றிப்பெறுவார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எனவே, நாடாளுமன்ற தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்றே பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story