டெல்லி கோர்ட்டில் பரபரப்பு: சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் மீது ஹெலிகாப்டர் ஊழல் தரகர் புகார்


டெல்லி கோர்ட்டில் பரபரப்பு: சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் மீது ஹெலிகாப்டர் ஊழல் தரகர் புகார்
x
தினத்தந்தி 13 March 2019 4:15 AM IST (Updated: 13 March 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

சொல்கிறபடி நடக்காவிட்டால் என் கதையை முடித்து விடுவதாக மிரட்டினார் என சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் மீது ஹெலிகாப்டர் ஊழல் தரகர் புகார் தெரிவித்தார்.

புதுடெல்லி,

சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, என்னை துபாயில் சந்தித்து, தாங்கள் சொல்கிறபடி நடக்காவிட்டால் என் கதையை முடித்துவிடுவதாக மிரட்டினார் என்று ஹெலிகாப்டர் ஊழல் தரகர் மைக்கேல் பரபரப்பு புகார் கூறினார்.

ஜனாதிபதி, பிரதமர் போன்ற தலைவர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலி நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்டிடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது.

இந்த ஹெலிகாப்டர் பேரத்தில் தரகராக செயல்பட்டவர் கிறிஸ்டியன் மைக்கேல். இவர் துபாயில் இருந்து நாடு கடத்திவரப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் கோர்ட்டில் ஒரு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

சில காலத்துக்கு முன்பு நான் துபாயில் இருந்தபோது என்னை சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா சந்தித்தார். (இப்போது இவர் மாற்றப்பட்டுவிட்டார்).

ஹெலிகாப்டர் ஊழல் விசாரணையில், தாங்கள் சொல்கிறபடி நான் நடந்து கொள்ளாவிட்டால், சிறைக்குள் வைத்து என் கதை முடிக்கப்படும் என்று மிரட்டினார். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

சிறையில் எனக்கு அடுத்த அறையில் தாதா சோட்டா ராஜன் உள்ளார். எத்தனையோ பேரை கொன்றவர்களுடன் சேர்த்து என்னையும் அடைப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லை.

சிறையில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் 16, 17 பேருடன் என்னை அடைத்துள்ளனர். சிறையில் என்னை மன ரீதியில் கொடுமைப்படுத்தினார்கள். இவ்வாறு அவர் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து திகார் சிறையில் வைத்து மைக்கேலை புதன் மற்றும் வியாழக்கிழமை (இன்றும், நாளையும்) விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இந்த விசாரணையின்போது மைக்கேலின் வக்கீலும், சிறை அதிகாரியும் உடன் இருக்கவும் நீதிபதி அனுமதி கொடுத்தார்.

மேலும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சம் கொண்ட வார்டுக்கு மைக்கேல் மாற்றப்பட்டது தொடர்பான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சி தொகுப்பை நாளை (வியாழக்கிழமை) கோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story