எரிக்சன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 453 கோடி ரூபாய் கடன்: நெருக்கடியில் அனில் அம்பானி
எரிக்சன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 453 கோடி ரூபாய் கடனால் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார் அனில் அம்பானி.
புதுடெல்லி,
ஸ்வீடன் நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனம் எரிக்ஸன். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45 ஆயிரம் கோடி கடனில் இருப்பதால், உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும்.
இந்த தொகையை செப்டம்பர் 30-ம்தேதிக்குள் செலுத்துவதாக ரிலையன்ஸ் நிறுவனமும் உறுதியளித்து இருந்தது. ஆனால், அந்த தேதி முடிவடைந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, எரிக்ஸன் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் அனில் அம்பானி, மற்ற இரு அதிகாரிகள் மீது தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களும் குற்றவாளி என அறிவித்தது. மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது. அதேபோல், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தலா ரூ.1 கோடியை ஒருமாதத்திற்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த அனில் அம்பானி, தற்போது கடன் சுமையில் சிக்கி தனது நற்பெயரை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் உள்ளார். ஸ்வீடனை சேர்ந்த எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 453 கோடியை திரட்டுவதற்காக, அனில் அம்பானி பல்வேறு விதத்திலும் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி வரும் செவ்வாய்கிழமைக்குள் வரும் (19-ம் தேதிக்குள்) எரிக்சன் நிறுவனத்திற்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனில் அம்பானி தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வரியாக செலுத்திய 260 கோடி ரூபாயை திரும்ப வழங்க எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. இந்த விவகாரம் திவால் நடவடிக்கைக்கு செல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு தீர்ப்பாயம் அறிவுறுத்தி இருக்கிறது.
திவால் நடவடிக்கையின் படி அனில் அம்பானி நிறுவன சொத்துகள் விற்கப்பட்டால் அதில் வரும் தொகையைப் பெறும் முதல் உரிமை எஸ்பிஐ வங்கிக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story