ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய 106 வயது பெண் - பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்


ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய 106 வயது பெண் - பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 16 March 2019 10:30 PM GMT (Updated: 16 March 2019 10:09 PM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுக்கொண்ட 106 வயது பெண் ஒருவர், ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக சிலருக்கு கடந்த 11-ந்தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாலுமரதா திம்மக்கா (வயது 106) என்ற முதிய பெண்மணியும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு அவர் விருதுக்காக அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நோக்கி புன்சிரிப்புடன் வந்தார்.

அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். இதை எதிர்பார்க்காவிட்டாலும், திம்மக்காவின் அந்த எளிய அன்பை ஜனாதிபதி பணிவுடன் தலை குனிந்து ஏற்றுக்கொண்டார்.

விருது விழா மற்றும் ஜனாதிபதி மாளிகையின் நடை முறைகள் மற்றும் விதிகளை மீறி திம்மக்கா செய்த இந்த நெகிழ்ச்சி சம்பவம், அரங்கில் இருந்த பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது. எனவே அவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி திம்மக்காவை பாராட்டினர்.

கர்நாடகாவின் குலிக்கல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா தனது கணவருடன் இணைந்து ஏராளமான மரங்களை நட்டு வளர்த்துள்ளார். குழந்தைகள் இல்லாததால் இளம் வயதில் தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மரம் வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார்.

இவ்வாறு கடந்த 65 ஆண்டுகளில் 400 ஆலமரங்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை திம்மக்கா நட்டு வளர்த்து இருக்கிறார். மரங்களை வெறுமனே நட்டுவிட்டு செல்லாமல் அவற்றை தொடர்ந்து பராமரித்தும் வந்திருக்கிறார் திம்மக்கா. இதற்காக 4 கி.மீ. தொலைவு வரை சென்று தண்ணீர் சேமித்து வந்து அரிய சேவையில் ஈடுபட்டு உள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு அவரது கணவர் மரணமடைந்தார். எனினும் திம்மக்காவின் மரங்கள் மீதான காதல் தொடர்ந்தது. திம்மக்காவின் இந்த சேவைக்காக அவரை ‘மரங்களின் தாய்’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த அரிய பணிகளுக்காகவே அவருக்கு பத்மஸ்ரீ விருதும் தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவரை தவிர மேலும் பலர் நேற்று பத்ம விருதுகள் பெற்றனர். இதில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

மேலும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரபால், கூடைப்பந்து வீரர் பிரசாந்தி சிங், நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஒடிசாவை சேர்ந்த டீ வியாபாரி பிரகாஷ் ராவ் ஆகியோரும் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.


Next Story