நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, 5 பேர் இந்தியர்கள்


நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, 5 பேர் இந்தியர்கள்
x
தினத்தந்தி 17 March 2019 7:20 AM IST (Updated: 17 March 2019 8:30 AM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

பலியானவர்களில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜோர்டான் என பல நாடுகளில் இருந்து சென்று நியூசிலாந்தில் குடியேறியவர்களும் அடங்குவார்கள். இதேபோன்று பல்வேறு நாட்டினர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் எல்லோரையும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

அந்த வகையில், இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் பலியாகியிருப்பதாக நியூசிலாந்துக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வம்சாவளியைச்சேர்ந்த  2 பேர் பலியாகிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோன்று எகிப்து, பாகிஸ்தானை சேர்ந்த தலா 4 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் பலியானது உறுதியாகி உள்ளது. நியூசிலாந்து நாட்டில் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

கிறைஸ்ட்சர்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு  துரிதமாக விசா வழங்குவதற்காக பிரத்யேக இணையப்பக்கத்தையும் நியூசிலாந்து அரசு உருவாக்கியுள்ளது. அதேபோல், உதவி எண்களும் வெளியிடப்பட்டது. இந்த தகவல்களை நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது. பலியான இந்தியர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.



Next Story