ஒரே ஒரு ஓட்டுக்காக தனி வாக்குச்சாவடி : தேர்தல் அதிகாரிகள் நடந்து செல்ல ஒருநாள் ஆகும்


ஒரே ஒரு ஓட்டுக்காக தனி வாக்குச்சாவடி : தேர்தல் அதிகாரிகள் நடந்து செல்ல ஒருநாள் ஆகும்
x
தினத்தந்தி 19 March 2019 3:32 AM IST (Updated: 19 March 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் ஒரே ஒரு வாக்காளருக்காக தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. அங்கு அதிகாரிகள் நடந்து செல்ல ஒரு நாள் ஆகும்.

இடாநகர், 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாசல பிரதேசம். இங்கு ஏப்ரல் 11–ந் தேதி சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அருணாசல பிரதேசத்தில் அன்ஜா மாவட்டத்துக்கு உட்பட்டது ஹைலியாங் சட்டமன்ற தொகுதி. ஹைலியாங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் மாலோகம் என்ற மலைக்கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் சோகிலா (வயது 39), அவருடைய கணவர் ஜனலூம் தயாங் ஆகியோர் குழந்தையுடன் வசித்து வருகிறார்கள். இங்கு மேலும் சில குடும்பங்களும் வசித்து வருகின்றன.

2014–ம் ஆண்டு நடந்த தேர்தலில் மாலோகம் வாக்குச்சாவடியில் சோகிலா மற்றும் அவருடைய கணவர் ஆகியோருக்கு மட்டுமே ஓட்டுகள் இருந்தன. அந்த கிராமத்தை சேர்ந்த மற்ற வாக்காளர்களுக்கு வேறு வாக்குச்சாவடியில் ஓட்டுகள் இருந்தன.

தற்போது சோகிலா கணவரும் சில காரணங்களுக்காக ஹைலியாங் தொகுதிக்கு உட்பட்ட வேறு வாக்குச்சாவடிக்கு தனது பெயரை மாற்றி விட்டார். இதனால் சோகிலாவின் ஓட்டுக்காக மட்டும் இங்கு தனியாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது.

ஹைலியாங் நகரில் இருந்து மாலோகம் வாக்குச்சாவடிக்கு அதிகாரிகள் நடந்து செல்ல ஒரு நாள் ஆகும் என்று முதன்மை தேர்தல் அதிகாரி கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘தேர்தல் நடைபெறும் நாளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி செயல்படும். அவர் வாக்களிக்க எப்போது வருவார் என்று எங்களுக்கு தெரியாது. யாரையும் நாங்கள் விரைவாக வந்து வாக்களிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது’’ என்றார்.

பக்கேஹெசாங் தொகுதிக்கு உட்பட்ட லாம்டா வாக்குச்சாவடியில் வெறும் 6 வாக்காளர்கள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 7 வாக்குச்சாவடிகளில் 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.


Next Story