காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் மோடி விளாசல்
படைகளுக்கு ஜீப் வாங்கியது தொடங்கி ஹெலிகாப்டர் வாங்கியது வரை ஊழல் மயம் தான் என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடி வலைப்பக்கத்தில் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளங்களையும் பிரசாரத்துக்காக பயன்படுத்தி வருகிறார்.
நேற்று அவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி அவர் கூறி இருப்பதாவது:–
நீங்கள் வாக்கு அளிக்க செல்கிறபோது கடந்த காலத்தை அதுவும், ஒரு குடும்பத்தின் ஆட்சி அதிகார ஆசையால், இந்த நாடு அதற்காக கொடுத்துள்ள விலையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள். ஊடகங்கள் தொடங்கி நாடாளுமன்றம் வரை, அரசியல் சாசன சட்டம் தொடங்கி கோர்ட்டு வரை, அரசு அமைப்புகளை அவமதிப்பது என்பது காங்கிரசின் வழி.
எப்பொதெல்லாம் குடும்ப அரசியல் பலம் வாய்ந்ததாக இருந்ததோ, அப்போதெல்லாம் அரசமைப்புகளுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது.
தற்போதைய மக்களவை 85 சதவீதம் செயல்பட்டிருக்கிறது. எப்போது குடும்ப அரசியல் இல்லாத கட்சி, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றிருக்கிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் நல்லமுறையில் செயல்பட விருப்பம் கொண்டிருந்ததை பார்க்க முடிந்திருக்கிறது. அப்போது நாடாளுமன்றம் இயங்க விடாமல் இடையூறு செய்வது யார், எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
குடும்ப அரசியல் நடத்துகிற கட்சிகள் ஒருபோதும், ஊடகங்கள் சுதந்திரமாகவும், துடிப்பாகவும் செயல்படுவதை வசதியாக கருதியது இல்லை. இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முதல் அரசியல் சாசன திருத்தமே, பேச்சு சுதந்திரத்தை குறைக்கத்தான்.
நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசு கொண்டு வந்ததே, அவர்களின் குடும்ப நலன்களை பாதுகாக்கத்தான். 356 என்ற அரசியல் சாசன பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளை அவர்கள் 100 முறையாவது கலைத்து இருப்பார்கள். இந்திராகாந்தியே இதை 50 முறை செய்திருப்பார். அவர்களுக்கு ஒரு மாநில அரசோ, அதன் முதல்–மந்திரியோ பிடிக்கவில்லை என்றால் ஆட்சியை நீக்கி விடுவார்கள்.
கோர்ட்டு அவமதிப்பு என்பதுவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செய்து வருகிற ஒன்றுதான். அரசியல் சாசனத்தை விட ஒரு குடும்பத்துக்குத்தான் கோர்ட்டுகளும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இந்திரா காந்தி நீதித்துறையை ஆக்கி இருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் நியமனத்தின்போது, மரியாதைக்குரிய பல மூத்த நீதிபதிகளை புறந்தள்ளி இருக்கிறார்கள்.
காங்கிரசின் செயல்முறை எளிதானது. நிராகரிக்க வேண்டும்; இழிவுபடுத்த வேண்டும்; அச்சுறுத்த வேண்டும் என்பதுதான்.
தலைமை கணக்கு தணிக்கையாளர் தொடங்கி திட்ட கமிஷன் வரை காங்கிரஸ் ஒரு போதும் அரசு அமைப்புகளை மதித்தது இல்லை. டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான திட்ட கமிஷனை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஜோக்கர்களின் கூட்டம் என்றார். அவர்களது ஆட்சியில் சி.பி.ஐ. காங்கிரஸ் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (காங்கிரஸ் புலனாய்வு அமைப்பாக) என்ற நிலையில் இருந்தது.
உளவுத்துறையிலும் (ஐ.பி.), வெளிநாட்டு உளவுத்துறையிலும் (ரா) வேண்டுமென்றே பதற்றம் உருவாக்கினார்கள்.
மத்திய மந்திரிசபை எடுத்த முடிவை, மந்திரிசபையில் இடம் பெற்றிராத ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது சுக்கல் நூறாக கிழித்து எறிந்தார்.
பாதுகாப்புத்துறையை வருமானத்துக்கான ஆதாரமாகத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதுமே பார்த்து வந்துள்ளது. எனவேதான் பாதுகாப்பு படைகள், தங்களுக்கு உரித்தான மரியாதையை ஒருபோதும் பெற்றது கிடையாது.
1947–ம் ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் அரசில் பாதுகாப்புத்துறையில் பல ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. ஜீப் வாங்கியது தொடங்கி துப்பாக்கி, நீர்மூழ்கி கப்பல், ஹெலிகாப்டர் வாங்கியது வரை எல்லாவற்றிலும் ஊழல்தான். தரகர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு குடும்பத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் ஆவார்கள்.
பயங்கரவாதிகள் மீது நமது படையினர் தாக்குதல் நடத்துகிறபோது, காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சியின் தலைமையில் உள்ளவர்களை குற்றம் சட்டுகின்றனர். பயங்கரவாதிகள் மீது நமது விமான படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்றால் அதன்மீதும் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.
ஆனால் அந்தக் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் கிடையாது. கட்சியின் தலைவர் ஒருவர், தலைமைப் பொறுப்புக்கு வர விரும்பினால், அவரை தூக்கி எறிந்து விடுவார்கள்.
இவ்வாறு அதில் பிரதமர் நரேந்திர மோடி எழுதி உள்ளார்.