சவுதி அரேபியாவில் இறந்த வாலிபரின் உடலுக்கு பதிலாக இலங்கை பெண்ணின் உடல் வந்தது : கேரளாவில் சோகம்
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கொன்னி பகுதியை சேர்ந்த ரசாக் என்பவரின் மகன் ரபீக் (வயது 29). சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த 28-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பத்தனம்திட்டா,
ரபீக்கின் உடல் கடந்த 20-ந் தேதி சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்தில் உடலை பெற்றுக்கொண்ட ரபீக்கின் உறவினர்கள், வீட்டுக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர். வீட்டில் வைத்து அந்த சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த பெட்டியில் ரபீக்கின் உடலுக்கு பதிலாக ஒரு பெண்ணின் உடல் இருந்தது.
இது, ஏற்கனவே சோகத்தில் இருந்த ரபீக்கின் உறவினர்களுக்கு மேலும் சோகத்தை கொடுத்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ரபீக்கின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்து தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவித்த ஒருவர், கொன்னிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது இலங்கையை சேர்ந்த பெண்டாரா மேனகி என்ற பெண்ணின் உடல் எனவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரபீக்கின் உடலை திரும்ப பெறவும், இலங்கை பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் பத்தனம்திட்டா மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரபீக்கின் உடல் சவுதி அரேபியா விமான நிலையத்தில் மாறியிருக்கக்கூடும் என தெரிகிறது.