தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ்கோயல் டுவிட்டரில் வாழ்த்து


தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ்கோயல் டுவிட்டரில் வாழ்த்து
x
தினத்தந்தி 22 March 2019 8:31 PM IST (Updated: 22 March 2019 8:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ்கோயல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இக்கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவையே அந்த தொகுதிகள். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை பா.ஜனதா வேட்பாளர் தேர்வு குழு மேற்கொண்டது.

இந்த பட்டியல்  அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

184 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை பா.ஜனதா மூத்த தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.

அதன்படி, தூத்துக்குடி தொகுதியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மீண்டும் அதே தொகுதியில் களம் காண்கிறார்.

கோவை தொகுதியில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிறுத்தப்பட்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ்கோயல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  கூறியிருப்பதாவது:-

பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழிசைஜி, சி.பி.ராதாகிருஷ்ணன்ஜி, எச்.ராஜா   ஜி, நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் பெரும் எண்ணிக்கையில் பாஜகவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என  பியூஷ் கோயல் பதிவிட்டுள்ளார்.

Next Story