13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை தற்காலிகமாக ரத்து செய்தது ஜெட் ஏர்வேஸ்
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமானம் கூடுதலாக 13 சர்வதேச வழித்தடங்களில் சேவையை ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை.
சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை. கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில், 13 சர்வதேச வழித்தடங்களில் ஏப்ரல் இறுதிவரை விமான சேவையை நிறுத்தி வைக்க இருப்பதாக ஜெட் ஏர்வெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் நேற்று மாலை தாக்கல் செய்த தகவலில் ஜெட் ஏர்வேஸ் இந்த தகவலை தெரிவித்து உள்ளது. குத்தகை ஒப்பந்தத்தின் படி செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை செலுத்தப்படாததால், கூடுதலாக 7 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story