பீகாரில் 39 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜனதா கூட்டணி : தொகுதி ஒதுக்காததால் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேருகிறார்


பீகாரில் 39 வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜனதா கூட்டணி : தொகுதி ஒதுக்காததால் சத்ருகன் சின்ஹா காங்கிரசில் சேருகிறார்
x
தினத்தந்தி 24 March 2019 4:45 AM IST (Updated: 24 March 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலத்தில் 39 வேட்பாளர்களை பா.ஜனதா கூட்டணி அறிவித்தது. இதில் தற்போதைய எம்.பி. நடிகர் சத்ருகன் சின்ஹா பெயர் இல்லை. இதனால் அவர் காங்கிரசில் சேருகிறார்.

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை தலா 17 தொகுதிகளிலும், மற்றொரு கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் 39 தொகுதிகளுக்கு பா.ஜனதா கூட்டணி நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.

அங்குள்ள பட்னா சாகிப் தொகுதியில் தற்போது நடிகர் சத்ருகன் சின்ஹா பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். 2 முறை எம்.பி.யான அவர் 2015 பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பா.ஜனதா மீது அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து கட்சி மீதும், பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மீதும் அவ்வப்போது எதிர்ப்பு குரல் கொடுத்துவந்தார். சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கிய ‘நானும் காவலாளி’ என்ற இயக்கத்துக்கும், ரபேல் ஒப்பந்த முறைகேடுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு சமீபத்தில் கொல்கத்தாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலில் சத்ருகன் சின்ஹா பெயர் இல்லை. அவரது பட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.

இதனால் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இன்று அல்லது நாளை அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று அவர்கள் கூறினர்.

அதேபோல பாகல்பூர் தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் மத்திய மந்திரி ஷாநவாஸ் உசேனுக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மத்திய மந்திரி ராதாமோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி, மூத்த தலைவர் கிரிராஜ் சிங் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் மீண்டும் ஜாமுயி தொகுதியில் போட்டியிடுகிறார்.


Next Story