சொந்தமாக கார் இல்லை; ரூ.72 லட்சம் கடன் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி வேட்புமனுவில் தகவல்


சொந்தமாக கார் இல்லை; ரூ.72 லட்சம் கடன் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி வேட்புமனுவில் தகவல்
x
தினத்தந்தி 5 April 2019 4:45 AM IST (Updated: 5 April 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு ரூ.16 கோடி என்றும், சொந்தமாக கார் இல்லை என்றும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வயநாடு,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து விவரங்கள் மற்றும் அவருக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதன் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதன்படி ராகுல் காந்தியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.5.80 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ.10.08 கோடி என மொத்தம் ரூ.15.88 கோடி சொத்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதில் 333.3 கிராம் தங்கமும் அடங்கும்.

கையிருப்பு ரூ.40 ஆயிரம்

எம்.பி. பதவி மூலம் கிடைக்கும் ஊதியம், ராயல்டி, வாடகை, பத்திரங்கள் மூலமான வட்டி உள்ளிட்டவற்றை வருமானமாக காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் 2017-18-ம் ஆண்டு வருமானம் ரூ.1.12 கோடி ஆகும்.

மேலும், ராகுல் காந்தியிடம் ரொக்கமாக ரூ.40 ஆயிரமும், பல்வேறு வங்கிகளில் ரூ.17.93 லட்சம் டெபாசிட்டும் செய்யப்பட்டு இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைப்போல பத்திரங்கள், பங்குகள் என ரூ.5.19 கோடி முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

5 வழக்குகள்

பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.72 லட்சம் கடன் இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் டெல்லி சுல்தான்பூரில் உள்ள பரம்பரை சொத்தான பண்ணை நிலத்தில் பங்கும், குருகிராமில் 2 அலுவலகங்களும் சொந்தமாக உள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டப்படிப்பு முடித்து இருப்பதாக கூறியுள்ள ராகுல் காந்தி, தனக்கு எதிராக 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதில் மராட்டியத்தில் 2 வழக்குகளும், ஜார்கண்ட், அசாம் மற்றும் டெல்லியில் தலா ஒரு வழக்கும் அடங்கும் என அவரது வேட்புமனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story