ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் நிதி தேவைக்காக வருமான வரியை உயர்த்த மாட்டோம் ராகுல் காந்தி உறுதி


ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் நிதி தேவைக்காக வருமான வரியை உயர்த்த மாட்டோம் ராகுல் காந்தி உறுதி
x
தினத்தந்தி 6 April 2019 3:00 AM IST (Updated: 6 April 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் நிதி தேவைக்காக வருமான வரியை உயர்த்தவோ, நடுத்தர மக்களுக்கு சுமை ஏற்றவோ மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாணவர்களிடையே உரையாடினார். அப்போது, ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கான நிதியை எப்படி திரட்டுவீர்கள்? என்று மாணவர்கள் கேட்டனர்.

அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

நிச்சயமாக, வருமான வரியை உயர்த்த மாட்டோம். நடுத்தர மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கவோ, அவர்களுக்கு சுமை ஏற்றவோ மாட்டோம். நிதி தேவைக்கு எல்லா வகையான கணக்கீடுகளும் போட்டு பார்த்து விட்டோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, ஏழைகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுத்தான் உருவாக்கப்பட்டது.

பெண்கள் இடஒதுக்கீடு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவோம். முன்பு இருந்த திட்ட கமிஷன், வியூக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், தற்போதைய நிதி ஆயோக், அமலாக்கம் மற்றும் வழிமுறை பற்றி மட்டுமே பேசுகிறது.

அதை மாநில அரசுகள் பார்த்துக் கொள்ளும். நமக்கு திட்ட கமிஷன்தான் தேவை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சுகாதாரம், கல்வி மேம்படுத்தப்படும்.

விமான தாக்குதல்

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட விமான தாக்குதலுக்கான பெருமை, விமானப்படையையே சாரும். இதில் அரசியல் செய்யக்கூடாது. ஆனால், துரதிருஷ்டவசமாக மோடி அதை செய்து வருகிறார். மோடியை நான் நேசிக்கிறேன். உண்மையிலேயே, அவர் மீது எனக்கு வெறுப்போ, கோபமோ கிடையாது. சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சிப்பவர்கள், கற்பனை உலகில் வாழ்பவர்கள். அவர்கள் அப்படி வாழ உரிமை உள்ளது. ஆனால், நிஜத்தில் இருந்து யாரும் விலகிச்செல்ல முடியாது. நிஜத்தை சந்தித்தே ஆக வேண்டும். நான் நிஜ உலகில் வாழ்கிறேன். வன்முறையால் யாருக்கும் பலன் கிடையாது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Next Story