திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் புதிய அரசு அமையும் மம்தா பானர்ஜி சொல்கிறார்
மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற எண்ணம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு உள்ளது.
பாரதீய ஜனதாவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வரும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார். அங்கு திரிணாமுல் காங்கிரசுக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
நிறைவேற்றவில்லை
இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபூர்தார் மாவட்டத்தில் உள்ள பரோபிஷா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அவர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தனது மனைவியை கவனித்துக்கொள்ள முடியாத ஒருவரால், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.
திரிணாமுல் காங். தலைமையில் புதிய அரசு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவு சட்டம், குடியுரிமை திருத்த மசோதா ஆகியவை இந்த நாட்டில் உள்ள சட்ட ரீதியிலான குடிமக்களை அகதிகள் ஆக்கும் சதித்திட்டம் ஆகும்.
இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படவேண்டும். தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Related Tags :
Next Story