பிரசாரத்தில் அத்வானி மீது விமர்சனம் ராகுல் காந்தி மீது பா.ஜனதா பாய்ச்சல்


பிரசாரத்தில் அத்வானி மீது விமர்சனம் ராகுல் காந்தி மீது பா.ஜனதா பாய்ச்சல்
x
தினத்தந்தி 7 April 2019 5:15 AM IST (Updated: 7 April 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

பிரசாரத்தின்போது அத்வானி பற்றி ராகுல் காந்தி விமர்சித்திருப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது தொகுதி, கட்சியின் தலைவரான அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி பலவாறான விமர்சனங்கள் வெளிவந்தாலும்கூட, அத்வானி வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி நிறுவப்பட்ட நாளையொட்டி, தனது மவுனத்தை கலைத்துக்கொண்டு, வலைப்பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர், “‘முதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியாகத்தான் நான். இதுவே எனது வாழ்க்கையில் நான் கடைபிடிக்கும் கொள்கை. அரசியல் ரீதியாக எங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாங்கள் எதிரிகளாக கருதுவதில்லை. அவர்கள் எங்களின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே” என குறிப்பிட்டிருந்தார்.

இதை பிரதமர் மோடி வரவேற்றார். “பாரதீய ஜனதா கட்சியின் உண்மையான சாரத்தை அத்வானி சரியாக சொல்லி இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சியின் வழிகாட்டும் மந்திரம், முதலில் தேசம், அடுத்து கட்சி, கடைசியில்தான் நான் என்னும் சுயம்” என டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

ராகுல் விமர்சனம்

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மராட்டிய மாநிலம், சந்திராப்பூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அத்வானி விவகாரத்தை எழுப்பி பேசினார்.

“நரேந்திர மோடி இந்து தர்மம் பற்றி பேசுகிறார். இந்து கலாசாரப்படி குரு என்பவர் எல்லோரைக் காட்டிலும் பெரியவர். இந்து கலாசாரம், குரு-சிஷ்யர் உறவு பற்றி சொல்கிறது. ஆனால் மோடி தனது குருவுக்கு என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் அத்வானியை அவமதிக்க மட்டும் செய்யவில்லை; களத்தில் இருந்து பிடித்து தள்ளி விட்டார்” என கூறினார்.

பா.ஜனதா பாய்ச்சல்

இந்த கருத்துக்காக ராகுல் காந்தி மீது பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் பாய்ந்தனர்.

அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய வெளியுறவு மந்திரியுமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “அத்வானி எங்கள் தந்தை போன்றவர். உங்களுடைய வார்த்தைகள் எங்களை ஆழமாய் புண்படுத்தி விட்டன. தயவு செய்து புண்பட்ட வார்த்தைகளால் கண்ணியத்துடன் பேசுங்கள்” என கூறி உள்ளார்.

இதேபோன்று மற்றொரு மூத்த தலைவரும், ரெயில்வே மந்திரியுமான பியூஸ் கோயல், டெல்லியில் நிருபர்களிடம் பேசியபோது ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அவர், “ஊழல்வாதிகளின் கூட்டணிக்கு தலைமை ஏற்க விரும்புகிற ஒருவர், இப்படி மூத்த தலைவர்களுக்கு எதிராக பேசி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் இன்றைக்கு மக்களால் நிராகரிக்கப்படும் நிலையில், யோசனைகள் இழந்து, வனாந்திரத்தில் முற்றிலும் தொலைந்துபோனது போல எனக்கு தோன்றுகிறது” என்று கூறினார்.

Next Story