வருமான வரி சோதனை: பா.ஜ.க. மீது கமல்நாத் பாய்ச்சல்


வருமான வரி சோதனை: பா.ஜ.க. மீது கமல்நாத் பாய்ச்சல்
x
தினத்தந்தி 8 April 2019 3:27 AM IST (Updated: 8 April 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி சோதனை தொடர்பாக, பா.ஜனதாவுக்கு கமல்நாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ‘ஹவாலா’ பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. அவர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, நேற்று அதிகாலை கமல்நாத்துக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து வருமான வரி சோதனை நடந்தது.

இது குறித்து கமல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோதனை நடைபெற்ற விதம் குறித்து முழுமையாக தெரிந்த பிறகே அது பற்றி கூற இயலும். எனினும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசியலில் தனக்கு எதிராக இருப்பவர்கள் மீது அரசியலமைப்பு சட்டத்தை வளைத்து எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள். எதிர்க்கட்சிகள் மீது மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா குறுக்கு வழியை கையாள முயற்சி செய்கிறது. இதே வழியை தான் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அக்கட்சி கையாண்டது. எனினும் மக்களுக்கு உண்மை எது என்று தெரியும். இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற பா.ஜனதா எந்த எல்லைக்கும் செல்லும். பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அவருடைய மனைவி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா வீடுகளில் சோதனை நடத்தினால் பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும்” என்றார்.


Next Story