யார் மனசுல யாரு?... அடுத்த பிரதமர் யாரு?... கருத்து கணிப்புகள் என்ன சொல்கிறது?


யார் மனசுல யாரு?... அடுத்த பிரதமர் யாரு?... கருத்து கணிப்புகள் என்ன சொல்கிறது?
x
தினத்தந்தி 8 April 2019 4:58 PM IST (Updated: 8 April 2019 4:58 PM IST)
t-max-icont-min-icon

ஆட்சி அமைக்கப்போவது எந்த கட்சி, பிரதமர் யார் என்பது குறித்து கருத்து கணிப்புகள் தெளிவாக்கி இருக்கிறதா..?

புதுடெல்லி

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இத்தனை  இடங்களை பாஜக வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், மத்திய அரசை தீர்மானிக்கும் 10 பெரிய மாநிலங்களில் 7 மாநிலங்களில் பெரும்பான்மையான இடத்தை அக்கட்சி வென்றதுதான். உத்தரபிரதேசம், பீகார், குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

நாட்டில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில்  273 பாராளுமன்ற தொகுதிகள் இந்த 7 மாநிலங்களிலும் அடங்கும். இது மொத்தம் உள்ள தொகுதிகளில் 36 சதவீதமாகும்.

2019  பாராளுமன்ற தேர்தலில் இந்த மாநிலங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளை பாரதீய ஜனதா இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. வரும் தேர்தலில் பாரதீய ஜனதா பெரும்பான்மை பெற வேண்டும் என்றால் குறைந்தது இங்கு 196 தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். இது சாத்தியமா  என்பது கேள்விக்குறியே?

பாரதீய ஜனதாவுடன் சென்றமுறை கூட்டணி கட்சிகளாக இருந்த பல கட்சிகள்  தற்போது எதிர்தரப்பில் மோடிக்கு எதிராக முறுக்கி கொண்டு நிற்கின்றன. கடந்த முறை உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாரதீய ஜனதா 71 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது.

ஆனால் இந்த முறை அங்கு கூட்டணி நிலவரங்கள்  மாறி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டிடுகின்றன. காங்கிரஸ் தனித்து விடப்பட்டு உள்ளது.

2014 தேர்தலைப்போல இந்தமுறை பா.ஜ.க.வினால் எளிதாக வெற்றிபெற முடியாது. அதுபோல, காங்கிரஸ் கட்சியும் எளிதில் வெற்றி பெற்றுவிடமுடியாது.

கடந்த பல கருத்து கணிப்புகளிலும் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றே வெளியாகி உள்ளது.

இந்தியா டுடே, சிஓட்டர்ஸ், ஏபிபி நியூஸ், இந்தியா டிவி, டைம்ஸ் நவ், சிஎன்எக்ஸ், ஹர்வி, டெக்கான் ஹெரால்டு  ஆகிய செய்தி நிறுவனங்கள் ஆகஸ்ட்  2015-ல் இருந்து 19-க்கும் மேற்பட்ட கருத்து கணிப்புகளை நடத்தி உள்ளன. முதலில் பாரதீய  ஜனதா மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பில் தகவல் வெளியானது. ஆனால் கடந்த 10 கருத்து கணிப்புகளில் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்க போவதில்லை என முடிவுகள் வெளியாகி உள்ளன.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சபை உருவானால், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு பதிலாக பிரியங்கா காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பாஜகவிலும் பிரதமர் வேட்பாளராக வேறு ஒருவர் முன்னிறுத்தப்படலாம்.

2014-ஆம் ஆண்டைப் போல யாரும் மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கப்போவது இல்லை,  கூட்டணி ஆட்சி என்கிற  நிலைதான். பலம் பெற்றுள்ள  மாநிலக்கட்சிகள் தாம் அடுத்த பிரதமரை தீர்மானிக்கிற சக்திகளாக இருக்க போகின்றன. இதைத்தான் கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

அதேபோல், தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைப்பதைத் தடுக்க மம்தா பானர்ஜியின் திரிணாமுல், மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆகியவை ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு உள்ளது.

இரண்டுமே நடக்காவிட்டால், மம்தா, மாயாவதி, அகிலேஷ் போன்றவர்கள் ஆட்சி அமைக்க வழிவிட்டு அவர்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முன் வரலாம்.

தற்போது மாநிலங்களில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள மாநில கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கள் நிலையை மாற்றிகொள்ளக்கூடும்.

தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க பாஜக, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், புதிய கூட்டணிகள் உருவாகலாம்.

டெல்லியில் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 தேசிய கட்சிகளையுமே எதிர்த்து ஆட்சியைப் பிடித்தது ஆம் ஆத்மி கட்சி. இப்போது மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது ஆம் ஆத்மி. 

மக்களவைத்தேர்தலில் எந்த மாநிலத்திலும் காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி வைக்கவில்லை. ஆனால், தேர்தலுக்கு பிறகு ஒருசூழல் உருவானால், காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி வைக்க  வாய்ப்பு இல்லை என கூற முடியாது.

தேர்தல் முடிவுகள் தான் நம்மை ஆட்சி செய்யபோகிறவர்கள் குறித்து முடிவு செய்யும்.

Next Story