நரேந்திர மோடி - ராகுல் காந்தி : பிரதமராக யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது கருத்து கணிப்பு
பிரதமராக யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு இடையிலான நேரடிப் போட்டியில் மோடியே முன்னணியில் இருந்து வருகிறார்.
புதுடெல்லி
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது. கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சி.என்.என்., நியூஸ் 18 நடத்திய கருத்துக்கணிப்பில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுக்கும் என தெரியவந்து உள்ளது. ஆனால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணிக்கு 263 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 76 தொகுதிகள் குறைவு. காங்., கூட்டணிக்கு 139 இடங்களும், மற்ற கட்சிகள் 141 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விட காங்கிரசுக்கு 56 தொகுகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் அதிக வெற்றிகள் கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவை பொறுத்தவரை, மொத்தமுள்ள 129 தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி 28, காங்கிரஸ் கூட்டணி 49 மற்றும் பிற கட்சிகள் 52 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 21, அதிமுக கூட்டணிக்கு 12 மற்றும் அமமுக., கட்சிக்கு 6 தொகுதிகள் கிடைக்கும் என தெரியவந்து உள்ளது.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்., 19, தெலுங்கு தேசம் கட்சி 6 இடங்களில் வெற்றி பெறும் என்றும், பா.ஜ.க , மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எங்கும் வெற்றி கிடைக்காது.
* கர்நாடகாவில் பா.ஜ., கூட்டணிக்கு 16, காங்கிரஸ் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைக்கும்.
* தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., 15, காங்கிரஸ் 1 மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெறும்.
* கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 15 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பா.ஜ.,வுக்கு எந்த தொகுதியும் கிடைக்காது.
இதுபோல் டிராங்கா டிவி நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.,கூட்டணி 222 முதல் 232 தொகுதிகளை பிடிக்கும் என்றும், காங்., கூட்டணி 115 முதல் 135 தொகுதிகளை பிடிக்கும் என்றும், மற்றவை 135 முதல் 155 தொகுதிகளை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான நேரடி போட்டியில், மீண்டும் மோடி பிரதமராக வர ஏராளமான மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம், சிவோட்டர்ஸ் நிறுவனம் இணைந்து கடந்த ஜனவரி முதல் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தின. அதன் முடிவுகளை படிப்படியாக அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இதில் பிரதமராக யாருக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பது குறித்த கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு இடையிலான நேரடிப் போட்டியில் மோடியே முன்னணியில் இருந்து வருகிறார்.
அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
" பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி அல்லது நரேந்திர மோடி இருவரில் யாரைத் தேர்வு செய்வீர்கள் என்று மக்களிடம் கேள்வியை முன்வைத்தோம். இதில் 2019, ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி ராகுல் காந்திக்கு 38 சதவீத மக்கள் ஆதரவு அளித்திருந்தனர். ஆனால், கருத்துக்கணிப்பு முடிவில் 34.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அதேசமயம், பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக வருவதற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 51சதவீத வாக்குகள் இருந்த நிலையில், கருத்துக்கணிப்பின் முடிவில் இது 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருவருக்கும் இடையிலான ஆதரவு 12 சதவீத இடைவெளியில் இருக்கிறது. இதில் பிரதமர் மோடி 2-வது முறையாக வருவதற்கான ஆதரவு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய பாலகோட் தாக்குதலுக்குப் பின் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பின் மோடியின் செல்வாக்கு 56.64 சதவீதம் அதிகரித்துள்ளது, அதேசமயம் ராகுலுக்கு 32.27 ச தவீதமாக இருந்தது.
பாலகோட் தாக்குதலுக்கு மறுநாள் அதாவது பிப்ரவரி 27-ம் தேதி மோடிக்கு ஆதரவு 57.84 சதவீதமாகவும், ராகுல் காந்திக்கான ஆதரவு 31.08 சதவீதமாக குறைந்தது.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தபின் மோடிக்கான ஆதரவு 60 சதவீதமாக உயர்ந்தது. ஜனவரி 1-ம் தேதிக்குப்பின் மோடிக்கான ஆதரவு 60 சதவீதம் உயர்ந்தது இதுதான் முதல் முறையாகும்.
அதேசமயம், ராகுல் காந்திக்கான ஆதரவு படிப்படியாக குறைந்து 29.52 சதவீதமானது. இதில் மிக உச்சகட்டமாக கடந்த மாதம் 6-ம் தேதி நிலவரப்படி, மோடிக்கு ஆதரவாக 54.65 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 26.05 சதவீதமாக குறைந்தது.
பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி, பிரதமர் மோடி இடையிலான நேரடிப் போட்டியில் மோடியே முன்னிலையில் இருந்து வருகிறார். ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இடையிலான ஆதரவு சதவீத இடைவெளி மிக அதிகமாக இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்குப் பின்பும் ராகுல் காந்திக்கு ஆதரவு பெரிய அளவுக்கு அதிகரிக்கவில்லை. ஏப்ரல் 2-ம் தேதி ராகுல் காந்திக்கு 33.58 சதவீதம் ஆதரவு இருந்த நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி 34.322 சதவீதமாக மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால், மோடிக்கான ஆதரவு 58 சதவீதமாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story