பாலகோட் தாக்குதல் குறித்த மோடியின் பேச்சு: அறிக்கை கோரியது தேர்தல் ஆணையம்
பாலகோட் தாக்குதல் குறித்து தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசியது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
புதுடெல்லி
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலை சுட்டிக்காட்டினார்.
அப்போது அவர், தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, பாலாகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்களின் முதல் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும். புல்வாமாவில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு முதல் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும் என பேசியிருந்தார்.
இந்திய ராணுவ நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடந்த மாதம் தடை விதித்திருந்தது. எனவே பிரதமரின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, பாலகோட் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மராட்டிய தேர்தல் அதிகாரியிடம் இருந்து தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
Related Tags :
Next Story