காங்கிரஸ் கட்சி தேர்தல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, ஏழைகள், கர்ப்பிணிகளுக்கான பணத்தை காங்கிரசார் கொள்ளையடிப்பதாக கூறினார்.
ஜுனாகத்,
குஜராத் மாநிலம் ஜுனாகத் நகரில் நேற்று நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-
பல்வேறு ஊழல்களின் பெயரால் காங்கிரஸ் கட்சி அறியப்பட்டு வருகிறது. அது தற்போது புதிய ஊழல் ஒன்றின் பெயரையும் பெற்று இருக்கிறது. அதுவும், ஆதாரத்துடன் சிக்கி இருக்கிறது. அதாவது ‘துக்ளக் சாலை தேர்தல் ஊழலில்’ காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. இதில் ஏழைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான நிதியை கொள்ளையடித்து வருகிறார்கள்.
டெல்லி துக்ளக் சாலையில் வசித்து வரும் முக்கியமான நபர் ஒருவரின் வீட்டில் இருந்து டெல்லியில் உள்ள ஒரு பெரிய கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ரூ.20 கோடி கைமாறியது தொடர்பான தகவல் ஒன்றை வருமான வரித்துறை கண்டுபிடித்து இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. (துக்ளக் சாலையில் ராகுல் காந்தியின் அலுவலக இல்லம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது)
காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்படுவதை கடந்த சில நாட்களாக நீங்கள் ஊடகங்களில் பார்த்து வருகிறீர்கள். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 6 மாதம் கூட இன்னும் நிறைவு பெறவில்லை. அதற்குள் அங்குள்ள காங்கிரசாரின் வீடுகளில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
முதலில் கர்நாடகாதான் காங்கிரசின் ஏ.டி.எம். எந்திரமாக இருந்தது. தற்போது மத்திய பிரதேசம் அதன் புதிய ஏ.டி.எம்.மாக மாறி இருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்காரிலும் இதுபோன்ற சூழல்தான் நிலவுகிறது. மக்களை கொள்ளையடிக்கவே காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர விரும்புகிறது.
மத்திய பிரதேசத்தில் தற்போது பிடிபட்ட பணம் வெறும் டிரெய்லர்தான். எனவே காங்கிரசின் கையில் நாட்டை கொடுத்தால், அப்புறம் எங்கள் கைகளில் எதுவும் இல்லை. காங்கிரசின் கதையே வெறும் ஒரு குடும்பத்தின் கதைதான்.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசாரின் வீட்டு வாசல் வரை சிறையை கொண்டு வந்திருக்கிறேன். இன்னும் நீங்கள் எனக்கு அடுத்த 5 ஆண்டுகளை கொடுத்தால், அந்த சிறைக்குள் அவர்கள் இருப்பார்கள்.
தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. 125 ஆண்டு பழமையான ஒரு கட்சியிடமிருந்து இதை எதிர்பார்க்க முடியுமா? நாட்டை பல துண்டுகளாக ஆக்க முயற்சிக்கும் இவர்கள் தேசதுரோகிகள் அல்லவா? இதைப்போல நமது ஆயுதப்படைகளின் அதிகாரத்தை குறைப்பது குறித்து காங்கிரஸ் பேசி வருகிறது.
இப்படி அவர்கள் தேர்தல் அறிக்கை முழுவதும் பாகிஸ்தானின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலேயே அமைந்து உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது, காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் வயிற்றெரிச்சல் அடைந்த அவர்கள், ஆதாரம் கேட்கிறார்கள்.
பயங்கரவாதம் மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டமும், வளர்ச்சியுமே பா.ஜனதாவின் தாரக மந்திரம். மேலும் ஏழைகளுக்காக பணி செய்தல், நடுத்தர வர்க்கத்தினருக்கு வாய்ப்புகளை வழங்குதல், நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய பா.ஜனதா விரும்புகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் டேப் ரிக்கார்டர் எப்போதும் ‘மோடியை அகற்றுவோம்’ என்பதாகவே ஒலிக்கிறது. அவர்களிடம் வேறு திட்டம் எதுவும் இல்லை.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.