இந்தியப் படைகளை வைத்து தொடர்ந்து வாக்கு சேகரிப்பு


இந்தியப் படைகளை வைத்து தொடர்ந்து வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 12 April 2019 2:22 PM IST (Updated: 12 April 2019 2:46 PM IST)
t-max-icont-min-icon

இந்தியப் படைகளை வைத்து தொடர்ந்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ராணுவம் மற்றும் இந்தியப் படைகளின் நடவடிக்கையை வைத்து வாக்கு சேகரிப்பு அதிகரித்து காணப்படுகிறது. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தும்  இதுதொடர்ந்து வருகிறது.

அபிநந்தன் போஸ்டர்கள்

பிப்ரவரி மாதம் இறுதியில் இந்தியா – பாகிஸ்தான் இடையே வான்மோதல் நேரிட்ட போது பாகிஸ்தானின் எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். அவர் சென்ற விமானமும் பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கியது.

பின்னர் பாகிஸ்தானில் சிக்கிய அவர், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2 நாட்களில் இந்தியாவிற்கு திரும்பினார். மத்திய அரசு பயங்கரவாதத்தை அழிக்க எல்லையைத் தாண்டி மேற்கொண்ட நடவடிக்கை அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டது. 

ஆனால் அதற்கு பின்னால் இச்சம்பவங்களை முன்வைத்து அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தனின் புகைப்படங்கள் இடம்பெற்றது. இதனை பல்வேறு தரப்பில் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனை தடுக்குமாறு முன்னாள் அட்மிரல் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.

இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி மேஜர் டிபி சிங் இதனை விமர்சனம் செய்து பதிவு செய்த டுவிட் செய்தியில், “எதுவரையில் இந்திய விமானப்படை அரசியலுக்கு இழுப்பீர்கள்? இந்திய விமானப்படையையும், அதனுடைய நடவடிக்கையையும் அரசியலுக்கு இழுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அட்மிரல் ராமதாஸ் எழுதிய கடிதம் சரியான நடவடிக்கையாகும்,” என கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் உத்தரவு

இதனையடுத்து இந்திய ராணுவம் மற்றும் இந்தியப் படைகளின் நடவடிக்கையை வைத்து அரசியல் கட்சிகள் வாக்குகளை சேகரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

உத்தரவு மீறல்

தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் பா.ஜனதா கட்சியின் சார்பில் நடத்தப்படும் பிரசார கூட்டங்களில் பெரும்பாலும் இந்திய ராணுவத்தையும், அதனுடைய நடவடிக்கையை வைத்துமே பிரசாரம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் படை வீரர்களின் புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றது.

இதில் ஒருபடி மேல் சென்ற உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய ராணுவம் மோடியின் சேனைகள் என்றார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் விடுத்தது.

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் இந்தியப் படையின் பாலகோட் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து பேசிவருகிறார்கள். 

எதிர்க்கட்சிகள் கேள்வி

இந்திய ராணுவத்தை வைத்து பா.ஜனதா அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை விமர்சனம் செய்கையில், பிரதமர் மோடி உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் இந்தியப் படைகளை வைத்து வாக்குகளை கேட்கிறார். இந்திய ராணுவம் இந்திய மக்களுக்கானது. இந்திய மக்களுக்கான பெருமை புல்வாமா தாக்குதல் தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது ஏன்? என்பது தொடர்பாக பிரதமர் மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும் என்றார். இதேபோன்று அரசியல்கட்சி விமர்சனம் செய்து வருகின்றன.

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மராட்டியத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, பாலகோட்டில் விமானப்படை விமானங்கள் நடத்திய துல்லிய தாக்குதலை சுட்டிக்காட்டினார். அப்போது அவர், தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, பாலகோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு உங்களின் முதல் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும். புல்வாமாவில் வீரமரணம் அடைந்த நமது வீரர்களுக்கு முதல் வாக்கை அர்ப்பணிக்க வேண்டும் என பேசியிருந்தார்.



இதைத் தொடர்ந்து பாலகோட் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை கோரி நோட்டீஸ் விடுத்தது. இருப்பினும் பா.ஜனதாவின் கூட்டங்களில் ராணுவத்தை பற்றிய நெடி தொடர்ந்து இருந்து வருகிறது.

ஜனாதிபதிக்கு கடிதம்

நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று 91 தொகுதிகளில் நடைபெற்றது. இதுவரையில் ராணுவம் அரசியலுக்காக பயன்படுத்தப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய முன்னாள் வீரர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

8 முன்னாள் படை தளபதிகள் மற்றும் 100 முன்னாள் படை வீரர்கள் முப்படையின் தலைவரான ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 2019 தேர்தலில் இந்திய ராணுவம் மற்றும் இந்தியப் படைகளின் நடவடிக்கையை முன்வைத்து வாக்கு சேகரிக்கும் விவகாரத்தில் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியப் படைகள் ஜனநாயக கட்டுப்பாட்டுடன் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளனர். இந்தியப் படைகளை வாக்குக்காக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story