நாங்கள் இந்த புகாரில் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை: சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு


நாங்கள் இந்த புகாரில் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை: சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு
x
தினத்தந்தி 20 April 2019 12:34 PM IST (Updated: 20 April 2019 1:50 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு கூறி உள்ளது.

புதுடெல்லி,

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுப்ரீம் கோட்டில்  பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியதாக இன்று காலை செய்தி வெளியானது.

இது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியதாவது:- 

என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியதாக வெளியான செய்தியால் மிகவும் வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் என் மீது கூறிய பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. சுதந்திரமாக பணியாற்றுவதால் இதுபோன்ற புகாருக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். 

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் . நீதித்துறையை சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடைபெறுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. எனது பணிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல்படுவேன்.  20 வருடங்களாக தூய்மையாக பணியாற்றியதற்கான அங்கீகாரமாகவே இந்த புகாரை கருதுகிறேன்.

என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால், பெண் ஊழியர் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார்.  பொய்யான தகவல்களை பரப்பும் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீது பாலியல் புகார் கூறிய பெண், குற்ற வழக்குகளுக்காக 4 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் மீது பல குற்ற பின்னணிகளும் இருந்துள்ளது. இதன் காரணமாக போலீசார் அவரை இருமுறை எச்சரித்துள்ளனர். 

அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளதால் தன் மீது பாலியல் புகார் சுமத்தப்படுகிறது. எனக்கு எதிரான பாலியல் புகார்களை மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள். நான் விசாரிக்க மாட்டேன்” என கூறினார்.

இந்த நிலையில்  நாங்கள்  இந்த புகாரில்  எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை. இதனை வெளியிட தடையும் இல்லை. ஆனால் ஆதாரமற்ற புகாரை வெளியிடலாமா என்ற பொறுப்புணர்வோடு ஊடகங்கள் செயல்படுங்கள். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான தகவல்களை பரப்பும் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்  சிறப்பு அமர்வு கூறி உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் சட்டப்படி பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடக்கூடாது. ஆனால் இந்த விவகாரத்தில் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசை ஆதரித்து வாதிடுவதே என் தொழில். ஆனால் அதற்காகவே என் மீது பலமுறை பழி சுமத்தப்பட்டுள்ளது  என  அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறினார்.

இந்த பாலியல் புகார் மிரட்டுவதற்காக கூறப்பட்டதாகத்தான் தெரிகிறது . இதை கடுமையாக கையாள வேண்டும்  என  சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா கூறினார்.

Next Story