திகார் சிறையில் கைதியின் உடலில் ‘ஓம்’ முத்திரை குத்திய சூப்பிரண்டு - விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு


திகார் சிறையில் கைதியின் உடலில் ‘ஓம்’ முத்திரை குத்திய சூப்பிரண்டு - விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 April 2019 3:00 AM IST (Updated: 21 April 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

திகார் சிறையின் சூப்பிரண்டு கைதியின் உடலில் ‘ஓம்’ முத்திரை குத்திய விவகாரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி திகார் சிறையில், சிறுபான்மை மதத்தை பின்பற்றும் விசாரணைக்கைதி ஒருவர் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரை கடுமையாக கொடுமைப்படுத்திய சிறை சூப்பிரண்டு ராஜேஷ் சவுகான், அந்த கைதியின் உடலில் ‘ஓம்’ முத்திரையை வலுக்கட்டாயமாக குத்தினார். அத்துடன் 2 நாட்கள் அவருக்கு உணவு கொடுக்காமலும் பட்டினி போட்டுள்ளார்.

திகார் சிறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கைதி சார்பில் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ரிச்சா பரிகார், உடனடியாக ராஜேஷ் சவுகானை சூப்பிரண்டு பதவியில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் மிகவும் கொடூரமானது என்றும் தீவிரமானது என்றும் தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை டிஜி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பினார். அத்துடன் அந்த விசாரணை கைதிக்கு மருத்துவ பரிசோதனை நடத்துமாறும் நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.


Next Story