3-ம் கட்ட தேர்தல் களத்தில் 392 கோடீஸ்வர வேட்பாளர்கள்


3-ம் கட்ட தேர்தல் களத்தில் 392 கோடீஸ்வர வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 21 April 2019 3:15 AM IST (Updated: 21 April 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 3-ம் கட்ட தேர்தல் களத்தில் 392 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதல் இரு கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் கேரளா உள்பட 15 மாநிலங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பிலும், சுயேச்சையாகவும் 1,612 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 142 பேர் பெண்கள் ஆவர்.

இவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து அவற்றின் பரிசீலனை அனைத்தும் முடிவுற்ற நிலையில், அந்த வேட்புமனுக்களை ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற அமைப்பினர் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.

இதில் 18 வேட்பாளர்களின் தரவுகள் தெளிவாக இல்லாத நிலையில், மீதமுள்ள 1,594 பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 392 பேர் அதாவது சுமார் 25 சதவீதத்தினர் கோடீசுவரர்கள் ஆவர். இவர்களது சொத்து மதிப்பு ரூ.1 கோடியை விட அதிகம் என கூறப்பட்டு உள்ளது.

3-ம் கட்ட தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 11 பேருக்கு எந்த சொத்தும் இல்லை. 183 பேர் வருமான விவரங்களை அளிக்கவில்லை. 32 பேருக்கு ஆண்டு வருமானம் ரூ.1 கோடியை விட அதிகம். மொத்தத்தில் 3-ம் கட்ட வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.95 கோடி ஆகும்.

இந்த வேட்பாளர்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 788 பேர் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்றுள்ளனர். 681 பேர் பட்டப்படிப்பும், அதற்கு மேலும் படித்து உள்ளனர். 57 பேருக்கு எழுதப்படிக்க மட்டுமே தெரிந்த நிலையில், 23 பேர் கல்வி அறிவு அற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த 3-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியும் கிடைத்து உள்ளது. அதன்படி 340 பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். இதில் 230 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. 14 பேர் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு உள்ளனர்.

குற்ற வழக்குகளில் சிக்கியவர்களில் 13 பேர் மீது கொலை வழக்கும், 30 பேர் மீது கொலை முயற்சி, 14 பேர் மீது கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.


Next Story