அ.தி.மு.க. கரைவேட்டியை அ.ம.மு.க.வினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு


அ.தி.மு.க. கரைவேட்டியை அ.ம.மு.க.வினர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் : தேர்தல் கமி‌ஷனில் அமைச்சர் சி.வி.சண்முகம் மனு
x
தினத்தந்தி 1 May 2019 5:00 AM IST (Updated: 1 May 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கரைவேட்டியை அ.ம.மு.க.வினர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் கமி‌ஷனில் நேற்று மனு அளித்தார்.

புதுடெல்லி,

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமி‌ஷனில் நேற்று காலை ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்ட வி‌ஷயங்கள் பற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் எல்லாம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தீர்க்கப்பட்டு உள்ளது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் இயங்கும் இயக்கம்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும், இரட்டை இலை சின்னமும் அவர்களுக்கே சொந்தம் என்றும் தீர்ப்பில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

அதன்படி, ‘இனிமேல் அ.தி.மு.க.வுக்கோ, இரட்டை இலை சின்னத்துக்கோ நான் சொந்தம் கொண்டாட மாட்டேன்’ என்று சுப்ரீம் கோர்ட்டில் டி.டி.வி.தினகரன் உறுதிமொழி அளித்துள்ளார். மேலும் புதிய கட்சி தொடங்கி அதை தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யவும் விண்ணப்பித்து இருக்கிறார்.

ஆனால் இந்த உறுதிமொழிக்கு மாறாக எங்கள் கழகத்தின் கொடி மாதிரியையும், ஜெயலலிதா படத்தையும் அவர் பயன்படுத்தி வருகிறார். குறிப்பாக அ.தி.மு.க.வின் கரைவேட்டியை அ.ம.மு.க.வினரும் பயன்படுத்துகிறார்கள். இதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். அதை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமி‌ஷனில் மனு அளித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க.வின் கொள்கைகளை அப்படியே அ.ம.மு.க.வின் கொள்கைகளாக மாற்றியிருப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. அ.தி.மு.க. விதிமுறையில் கட்சியின் கரைவேட்டி பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

கொடியை பொறுத்தவரை, பாதி கருப்பும், பாதி சிவப்பும், நடுவில் கொடிக்கம்பத்தை நோக்கி அண்ணா ஒரு விரலை காட்டும் உருவத்தை வெள்ளை நிறத்தில் கொண்டதே அ.தி.மு.க.வின் கொடி என்று விதிமுறையில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் அ.ம.மு.க. கொடியில் 25 சதவீதம் கருப்பு, 25 சதவீதம் சிவப்பு, 50 சதவீதம் வெள்ளைநிறம் பயன்படுத்தப்படுகிறது. நடுவில் ஜெயலலிதா படம் உள்ளது. எனவே, அ.ம.மு.க. கொடி முற்றிலும் அ.தி.மு.க. கொடியில் இருந்து வேறுபட்டது. அ.தி.மு.க.வின் புகாருக்கு தேர்தல் கமி‌ஷன் விளக்கம் கேட்டால் உரிய பதிலை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story