இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க சிவசேனா கோரிக்கை


இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க சிவசேனா கோரிக்கை
x
தினத்தந்தி 1 May 2019 8:04 PM IST (Updated: 1 May 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையை போன்று இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்க சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.


புதுடெல்லி, 


ஏசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கடந்த 21–ந்தேதி உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடிய வேளையில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் உலகை உலுக்கின. கிறிஸ்தவ ஆலயங்களையும், நட்சத்திர ஓட்டல்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 253 பேர் கொல்லப்பட்டிருப்பது ஈர இதயங்களை நொறுங்கச்செய்தது.

இந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது நாங்கள் தான் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இருப்பினும், இலங்கை அரசு, உள்நாட்டில் இயங்கி வருகிற தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் மீது குற்றம்சாட்டி வருகிறது. இலங்கையில், அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் பெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் சோதனைகளும் தொடர்கிறது. 

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பெண்கள் முகத்தை மறைத்தவாறு பர்தா அணிந்து பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது. 

இதனை மேற்கோள்காட்டி பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும், இந்தியாவில் பயங்கரவாத செயலை தடுக்கும் வகையில் பெண்கள் முகத்தை மறைத்து வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கருத்து தெரிவித்தது.

ஆனால் சிவசேனாவின் இந்த கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்து உள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் மராட்டியம் உள்பட எந்த மாநிலத்திலும் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதனால் அதற்கு அவசியமில்லை என கருதுகிறேன். ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும். ஆனால் மோடியின் ஆட்சியில் அந்த பயம் இல்லை. இதனால் பெண்கள் முகத்திரை அணிந்து வருவதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

Next Story