தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு


தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 May 2019 3:34 PM GMT (Updated: 1 May 2019 3:34 PM GMT)

அரியானாவில் தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 வாலிபர்கள் ஓடும் ரெயிலில் சிக்கி உயிரிழந்த பயங்கர சம்பவம் நேரிட்டுள்ளது.


இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் வேகமாக பரவியுள்ள செல்பி மோகம் பல சமயங்களில் அவர்களுடைய உயிருக்கு உலை வைக்கிறது. பஸ் முன்னதாக செல்பி எடுப்பது, ரெயில் முன்னர் செல்பி எடுப்பது, பைக்கில் சென்ற வண்ணம் செல்பி எடுப்பது, கடல் அலைகளுக்கு மத்தியில் செல்பி எடுப்பது என அவர்களுடைய எல்லை விரிந்துக்கொண்டே செல்கிறது. இதனால் பெற்றவர்களுக்குதான் பிள்ளைகள் இல்லாமல் செல்கிறது. இதுபோன்ற கொடூரமான சம்பவம் அரியானாவில் நடைபெற்றுள்ளது.  

அரியானாவின் பானிப்பட்டில் வசித்து வந்த சன்னி, சாமன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கி‌ஷன், டெல்லியை சேர்ந்த தினேஷ் ஆகிய 4 பேரும் உறவினர்கள். 18 முதல் 20 வயது வரையிலானவர்கள். திங்கட்கிழமையன்று டெல்லி–அம்பாலா வழித்தடத்தில் உள்ள பூங்காவுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்து பேசியுள்ளனர். அப்போது செல்பி எடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளனர்.  அப்போது தண்டவாளத்தில் அதிவேகமாக ஒரு ரெயில் வந்து கொண்டிருந்ததை கவனித்து பதற்றம் அடைந்தனர். 

அவர்களில் சன்னி, கி‌ஷன், சாமன் ஆகிய மூவரும் அந்த தண்டவாளத்தில் இருந்து இடது புறம் இருந்த தண்டவாளத்துக்கு தாவினர். தினேஷ் மட்டும் வலது புறம் இருந்த தண்டவாளத்தில் குதித்தார். ஆனால் மூன்று பேரும் ஒன்றாக குதித்த தண்டவாளத்தில் டெல்லி–கல்கா பயணிகள் ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்க தவறினர். அந்த ரெயில் அவர்கள் மீது மோதித்தள்ளியது.  
 வலது புற தண்டவாளத்தில் குதித்ததால் தினேஷ் மட்டும் உயிர் தப்பினார். ஆனால் நண்பர்களுடைய உயிரிழப்பு அவரை மிகவும் வேதனைக்குள் ஆழ்த்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

‘செல்பி’ மோகத்தில் திரிகிற இளைய தலைமுறையினருக்கு இச்சம்பவம் பாடமாகவும் ஆகி உள்ளது.

Next Story