பிரதமர் மோடியை சிறார்கள் வசை பாடிய விவகாரம், பிரியங்கா காந்தி விளக்கம்


பிரதமர் மோடியை சிறார்கள்  வசை பாடிய விவகாரம், பிரியங்கா காந்தி விளக்கம்
x
தினத்தந்தி 2 May 2019 7:22 PM IST (Updated: 2 May 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியை சிறார்கள் வசை பாடியதை பார்த்து பிரியங்கா வாயடைத்து நிற்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்த போது சிறார்களிடம் பேசியுள்ளார். அப்போது சிறார்கள் பிரதமர் மோடியை வசை பாடியுள்ளனர். பிரதமர் மோடியை ஒரு திருடன் என கத்தி கோஷம் எழுப்பினர். சிறுவர்களின் கோஷங்களை பார்த்து பிரியங்கா காந்தி வாயடைத்து நின்றார். இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவியபோது, சிறார்களை இப்படி பேசவைக்கிறார்கள் என பா.ஜனதாவினர் பதிலடி தாக்குதலை தொடங்கினர். 

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `அருவருப்பின் உச்சம். பிரதமர் ஒருவருக்கு கிடைக்கும் வசைமொழிகள் குறித்து எண்ணிப்பாருங்கள்'' என்று குறிப்பிட்டார்.

ஆனால் உண்மையிலே பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை வசை பாடியதை பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றாரே தவிர, சிறார்களை அப்படி பேச சொல்லி உற்சாகப்படுத்தவில்லை. இதுதொடர்பான எடிட் வீடியோவே பா.ஜனதாவினர் தரப்பில் பரப்பப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டது. பிரியங்கா காந்தி சிறார்கள் அப்படி பேசுவதை உண்மையில் தடுத்து நிறுத்தியுள்ளார். 

 “சிறார்களே இப்படி பேசக்கூடாது, இதுபோன்று பேசுவது நல்லது கிடையாது.  நீங்கள் நல்ல குழந்தைகளாக இருக்கவேண்டும்,” என்று அட்வைஸ் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுவர்கள் பிரதமர் மோடியை வசை பாடிய கோஷத்தை நிறுத்திக்கொண்டனர்.  பின்னர் அவர்கள், `ராகுல்காந்தி ஜிந்தாபாத்’ என்று முழங்கங்களை எழுப்பினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரியங்காவின் செயல் ஒரு பக்கம் பாராட்டப்பட்டாலும், அவர்தான் தூண்டினார் என்று மற்றொரு வீடியோவும் வைரலாகியது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி என்டிடிவிக்கு இதுதொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அதில், நான் சிறுவர்கள் அவ்வாறு கோஷமிடுவதை தடுத்துதான் நிறுத்தினேன். பா.ஜனதாவினர்தான் வீடியோவை எடிட் செய்துள்ளனர். அது அவர்களாகவே உருவாக்கியது. அவர்கள் உண்மையை டுவிஸ்ட் செய்கிறார்கள். ஆனால் நான் உண்மையைதான் பேசினேன் எனக் கூறியுள்ளார். 

Next Story