பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு : ஒடிசாவை இன்று தாக்குகிறது ‘பானி’ புயல்


பிரதமர் மோடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு : ஒடிசாவை இன்று தாக்குகிறது ‘பானி’ புயல்
x
தினத்தந்தி 3 May 2019 5:30 AM IST (Updated: 3 May 2019 8:57 AM IST)
t-max-icont-min-icon

‘பானி’ புயல், இன்று ஒடிசா மாநிலத்தை தாக்குகிறது. 8 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

புவனேசுவரம்,

சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு ‘பானி’ என பெயர் சூட்டப்பட்டது.

‘பானி’ புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்மூலம் சென்னை மற்றும் அதையொட்டிய புறநகர்ப்பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ‘பானி’ புயல் பாதை மாறியது. அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் ஒடிசா மாநிலம் பூரி அருகே கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே ‘பானி’ புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் காரணமாக கடலோர ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினம், விஜயநகரம் உள்ளிட்ட பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. சூறைக்காற்று வீசியது.

‘பானி’ புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 200 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசும். இடைவிடாது மழை பெய்யும் என வானிலை வட்டாரங்கள் கூறுகின்றன. இது ஆந்திரா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புயல் ஆபத்து உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கையை ஒடிசா மாநில அரசு நேற்று காலை தொடங்கியது. காலை 10.30 மணிக்குள் 11 மாவட்டங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வீடுகள் போன்ற வசதிகளுடன்கூடிய பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 8 லட்சம் பேர் இப்படி வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பல்நோக்கு தங்கும் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறின.

4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு சிறப்பு படையினர் ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய 3 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முழுமையான உபகரணங்களைக் கொண்டுள்ள 28 குழுக்கள் பூரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக படகுகள், செயற்கை கோள் தொலைபேசிகள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மரம் வெட்டும் சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளனர். இந்தக் குழுக்களில் டாக்டர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், என்ஜினீயர்கள், முக்குளிப்போர் (டைவர்கள்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

‘பானி’ புயலை எதிர்கொள்வது தொடர்பாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் நேற்று உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர், உள்துறை செயலாளர், வானிலை ஆராய்ச்சி துறை, தேசிய பேரிடர் மீட்பு அதிரடிப்படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புயலை சந்திப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் சுருக்கமாக எடுத்துரைத்தனர்.

‘பானி’ புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிற ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்படுமாறு மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதே போன்று ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

‘பானி’ புயல் காரணமாக 2 நாட்களில் 89 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே துறை கூறுகிறது. நேற்று ஒரே நாளில் 81 ரெயில்கள் ரத்து ஆகின. ஹவுரா-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், புதுடெல்லி-புவனேசுவரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் அடங்கும்.

மேலும் கடலோர விமான நிலையங்கள் அனைத்தும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதை சிவில் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ் பிரபு, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Next Story