ஒடிசாவில் “பானி புயலில் பிறந்த பெண் குழந்தைக்கு பானி” என்றே பெயர் சூட்டிய பெற்றோர்!
ஒடிசாவில் பானி புயலில் பிறந்த பெண் குழந்தைக்கு அந்த குழந்தையின் பெற்றோர் பானி என்று பெயர் சூட்டிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
புவனேஷ்வர்,
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. பானி என பெயரிடப்பட்ட அந்த புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. இந்த புயலானது, இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி, பானி புயல் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடந்தது. ஒடிசாவில் கரையை கடந்த போனி புயல், தற்போது மேற்குவங்கம் நோக்கி நகர்ந்து வருவதாக ஒடிசா வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் புரி அருகே இன்று கரையைக் கடந்த பானி புயலால் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலமே இன்று பானி புயலால் செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயுள்ளது.
பொதுமக்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தநிலையில், புயல் ஒடிசாவை புரட்டி எடுத்த போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே பெட்டிகள் பராமரிப்புத் தொழிற்சாலையில் ஊழியராக இருக்கும் 32 வயது பெண்ணுக்கு இன்று காலை 11.03 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
புவனேஸ்வரில் உள்ள ரயில்வே மருத்துவனையில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பானி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பானி புயல் சின்னம் கரையைக் கடந்த போது இந்த குழந்தை பிறந்ததால், அதன் நினைவாக இக்குழந்தைக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டதாக அந்த குழந்தையின் தாய் தெரிவித்தார். தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story