ஒடிசாவில் பானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறுநாள் பார்வையிடுகிறார் மோடி
ஒடிசாவில் பானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறுநாள் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.
புவனேஸ்வர்
பானி புயல் கரையைக் கடந்தபோது ஏற்படுத்திய சேதத்தால் ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டம் உருக்குலைந்து போயுள்ளது.
புயலின் கண் பகுதி, பூரி நகரைச் சுருட்டியது. மரங்களையும், மின் கம்பங்களையும் பானி பிடுங்கி வீசியது. கட்டிடங்களின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. புயலின்போது, பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் பூரி முழுவதும் வெள்ளக்காடானது. தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள விமான நிலையத்தையும் பானி விட்டு வைக்கவில்லை.
தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் முன்கூட்டியே முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தபோதிலும், மரம் சாய்ந்தது, மேற்கூரை காற்றில் பறந்து வந்து தாக்கியது போன்ற விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேதம் குறித்து டோர்னியர் விமானங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பூரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
அந்த வீடியோ காட்சிகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். நிவாரணப் பணிகளுக்கான திட்டமிடலுக்கு அவை உதவும்.
ஒடிசாவில் பானி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாளை மறுநாள் மோடி பார்வையிடுகிறார்.
Related Tags :
Next Story